ஒரு குழந்தையை அன்போடு அனைத்துக்கொண்டு, தாய் தன் விரலை அக்குழந்தையின் உதடுகளின் முன் வைத்து – ஷ்ஷ்… என்ற வார்த்தையைச் சொல்வது போன்று கற்பனை செய்துபார். இந்த செயலில், எளிய வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், ஏமாற்றங்களின் மத்தியில் எதிர்பார்ப்போடுள்ள குழந்தையின் வலி அல்லது அசௌகரியத்தை அமைதிப்படுத்துவதாகும். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாவிடத்திற்கும், எக்காலத்திற்கும் உரியவை. நாம் அனைவருமே இத்தகைய அன்பின் வெளிப்பாடுகளைப் பெற்றிருக்கவும் முடியும், கொடுத்திருக்கவும் முடியும். நான் சங்கீதம் 131:2 ஐ தியானித்த போது இந்த காட்சிதான் என் கண் முன்னே வந்தது.

இந்த சங்கீதத்தின் வார்த்தைகளும் போக்கும் சங்கீதக்காரன் தாவீதின் தீவிரமான அநுபவத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகள் எனத் தெரிகின்றது. நீ ஏமாற்றத்தையோ, தோல்வியையோ சந்திக்கும் போது, அது உன்னை ஜெபத்திற்கு நேராக வழிநடத்தினதுண்டா? உன்னுடைய வாழ்வின் சூழ்நிலைகளால் நீ தாழ்த்தப்படும்போது நீ என்ன செய்வாய்? ஒரு தேர்வில் தோற்கும் போது, ஒரு வேலையை இழந்த போது அல்லது ஓர் உறவின் முடிவைச் சந்தித்தபோது என்ன செய்வாய்? தாவீது தன்னுடைய இருதயத்தை கர்த்தரிடத்தில் ஊற்றி, அத்தோடு தன் ஆன்மாவை உண்மையாய் ஆராய்ந்து அறிந்து ஒரு பட்டியலை தயாரித்தான் (சங். 131:1) அவனுடைய சுற்றுச் சுழலோடு சமாதானம் செய்து கொண்டபின், ஒரு குழந்தை தன் தாயின் அரவணைப்பிலிருக்கும் போது அமைதியாயிருப்பது போல, தாவீதும் மன நிறைவைப் பெற்றுக்கொண்டான் (வச. 2).

வாழ்க்கையின் சூழல் மாறலாம். சிலவேளைகளில் நாம் தாழ்த்தப்படலாம். ஆனாலும் நாம் நம்பிக்கையோடும் மன நிறைவோடும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்களித்துள்ள தேவன் நம்மோடிருக்கிறார் என அவரை முற்றிலுமாக நம்புவோமாக.