எங்களடைய மகன் சேவியர் இரண்டு வயதாயிருந்த போது ஒரு செருப்புக் கடை ஒன்றின் ஒவ்வொரு இடைபாதையிலும் வேகமாக ஓடி, செருப்பு பெட்டிகளின் அடுக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தான். என்னுடைய கணவன் ஆலன் அவனைப் பார்த்து, “நான் உன்னைப் பார்க்கின்றேன்” எனக் கூறியதும், அவன் சிரித்து மகிழ்ந்தான்.
சில கணங்களுக்குப் பின்னர் என் கணவன் ஆலன் பதற்றத்தோடு ஒவ்வொரு இடைபாதையிலும் சேவியர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருக்கக் கண்டேன். நாங்கள் வேகமாக அக்கடையின் முன்பக்கக் கதவையடைந்தோம். அங்கு எங்கள் குழந்தை சிரித்துக் கொண்டே, கூட்டம் நிறைந்த ஒரு தெருவிற்குச் செல்லும் கதவிற்கு நேராக ஓடிக் கொண்டிருந்தான்.
நொடிப் பொழுதில் ஆலன் அவனை அப்படியே தூக்கிக் கொண்டார். நாங்கள் அவனை அணைத்துக் கொண்டு தேவனுக்கு நன்றி கூறிக் கொண்டு, ஏக்கத்தோடு அச்சிறுவனின் கன்னங்களில் முத்தமிட்டோம்.
ஓராண்டிற்கு முன்பு, சேவியர் என் கருவில் உண்டாயிருந்த போது நான் என்னுடைய முதல் குழந்தையை இழந்துவிட்டேன். தேவன் இந்த மகனைத் தந்து எங்களை ஆசீர்வதித்தபோது, நான் சற்று பயமுள்ள பெற்றோராகி விட்டேன். ஆனால், அந்த செருப்புக் கடை அநுபவம் நாம் நம் குழந்தையை எப்பொழுதும் பார்த்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது என்பதை விளக்கிவிட்டது. ஆகையால் நான் கவலையோடும், பயத்தோடும் போராடிக் கொண்டிருக்கும் போது எனக்குள்ள ஒரே உதவியான என் தேவனை நோக்கிப்பார்க்கக் கற்றுக்கொண்ட போதுதான் எனக்கு சமாதானம் கிடைத்தது.
நம்முடைய பரலோகத் தந்தை தன்னுடைய பிள்ளைகளின் மீது எப்பொழுதும் கண்ணோக்கமாயிருக்கிறார் (சங். 121:1-4) நம்முடைய சோதனைகளையும், மனவேதனைகளையும், இழப்பையும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், எப்பொழுதும் நமக்குதவி செய்பவரும், நம்மைக் காப்பவரும், நம் வாழ்வைக் கண்காணிப்பவருமாகிய தேவனைச் சார்ந்து, அவர் மீதுள்ள உறுதியான நம்பிக்கையோடு வாழமுடியும் (வச. 5-8).
நாம் இழந்து போனவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் எண்ணும்படியான நாட்களையும் எதிர்நோக்கலாம். நாம் நேசிக்கின்றவர்களை நாம் பாதுகாக்க முடியாத வலிமையற்றவர்களாக உணரலாம். ஆனால், எல்லாம் அறிந்த தேவன் அவருடைய விலையேறப்பெற்ற அன்புப் பிள்ளைகளின் மீதுள்ள பார்வையை என்றுமே நீக்குவதில்லை என்பதை நாம் நம்புவோம்.
தேவனுடைய கண்கள் எப்பொழுதும் அவருடைய பிள்ளைகளின் மீது இருக்கின்றன.