“என்னுடைய நேர்த்தியான உலகம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிவருமாறு கேற்றியின் பள்ளியில் ஒரு வேலை கொடுத்திருந்தனர். அவள் தன்னுடைய கட்டுரையில் “என்னுடைய நேர்த்தியான உலகில்… ஐஸ் கிரீம்கள் இலவசம், எவ்விடத்திலும் லாலிப்பாப்கள் கிடக்கின்றன, வித்தியாசமான வடிவங்களில் அமைந்த ஒரு சில மேகங்களோடு வானம் எப்பொழுதும் நீல நிறமாகவேயிருக்கும்” என ஆரம்பித்த அவளுடைய கட்டுரை திடீரென ஒரு தீவிர மாற்றம் பெற்றது. “அந்த உலகில் ஒருவர் வீட்டிற்கும் துயரச் செய்தி வருவதில்லை. அப்படியொரு செய்தியை யாரும் கொண்டு செல்லத் தேவையேயில்லை” எனத் தொடர்ந்தாள்.

ஒருவர் வீட்டிலும் துயரச்செய்தியேயில்லை என்பதைக் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இந்த வார்த்தைகள் நம்மை வல்லமையாக இயேசுவின் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நேராகத் திருப்புகின்றது. அவர், “சகலத்தையும் புதிதாக்குகின்றார்”, நம்முடைய துயரை அகற்றி, இவ்வுலகை மாற்றுகின்றார் (வெளி. 21:5).

பரதீசில் துன்பங்கள் இல்லை, மரணமில்லை, புலம்பலில்லை, வேதனையில்லை, கண்ணீர் இல்லை (வச. 4). அது, நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு நேர்த்தியான இடம். தேவன் தம் அன்பினால் தம் விசுவாசிகளை விடுவித்து தனக்கென்று சேர்த்துக் கொண்ட இடம். எத்தனை அற்புதமான மகிழ்ச்சி நமக்குக் காத்திருக்கின்றது!

இந்த முழுமையின் உண்மையை நாம் இங்கேயே அனுபவிக்கலாம். நாம் தேவனோடு அனுதினம் ஐக்கியப்படும்போது அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் (கொலோ. 1:12-13). நாம் பாவத்தை எதிர்த்துப் போராடும் போது, பாவத்தையும், மரணத்தையும் முற்றிலும் ஜெயம் பெற்ற கிறிஸ்து நமக்குத் தருகின்ற வெற்றியை அனுபவிப்போம் (2:13-15).