ஒரு சிறப்பான நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக என்னுடைய கணவன் என்னை அருகிலுள்ள கலை அரங்கத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள வண்ணந்தீட்டப்பெற்ற படங்களில் ஏதாவது ஒன்றினை அவருடைய பரிசாக வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஒரு சிறிய நீரோடை காட்டினூடே ஓடுகின்ற காட்சியைக் கொண்ட படத்தினைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நீரோடையின் பரப்பு அந்தப் படத்தின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டபடியால் வானத்தின் காட்சி இப்படத்தில் காட்டப்படவில்லை. ஆனால், அந்த நீரின் பிரதிபலிப்பில் சூரியன் இருந்த வான் பகுதியையும், மரங்களின் மேற்பகுதியையும், மங்கலான சுற்றுச் சூழலையும் காணமுடிந்தது. வானத்தைக் காட்டக்கூடிய ஒரேயிடம் அந்த நீரின் மேற்பரப்புமட்டும் தான்.
ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் இயேசுவும் அந்த நீரோடையைப் போன்றே, தேவன் யாரைப் போன்றிருப்பார் என்பதை நமக்கு பிரதிபலிக்கின்றார். எபிரெயரை எழுதியவர் “குமாரன் தேவனுடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார்” (1:3) என எழுதுகின்றார். தேவனைக் குறித்த உண்மைகளை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “தேவன் அன்பாயிருக்கிறார்” என்பது போன்ற சில நேரடியான கூற்றுக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தாலும், நாம் இவ்வுலகில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை தேவன் சந்திக்க நேரிட்டால் அவர் எவ்வாறு செயல்படுவார் என்று நாம் சிந்தித்தோமேயாயின் நம்முடைய புரிந்துகொள்ளல் இன்னும் சற்று ஆழமாக இருக்க முடியும். தேவன் மனிதனாக இவ்வுலகில் இருந்தால் எவ்வாறு செயல்படுவார் என்பதையே இயேசு நமக்குச் செயல்படுத்திக் காண்பித்தார்.
சோதனை நேரங்களில் இயேசு, தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தினார். ஆவியின் இருளை எதிர்நோக்கும்போது தேவனுடைய அதிகாரத்தை இயேசு காட்டினார். ஜனங்களின் பிரச்சனைகளோடு போராடும் போது தேவனுடைய ஞானத்தை நமக்குக் காட்டினார். அவருடைய மரணத்தின் மூலம் தேவனுடைய அன்பை விளக்கினார்.
தேவனைக் குறித்த அனைத்துக் காரியங்களையும் நம்மால் கிரகிக்கக் முடியாது. நம்முடைய குறுகிய சிந்தனையில் அவருடைய பரந்த எல்லையைக் காணமுடியாது. ஆனால், தேவனுடைய குணாதிசயங்களைக் கிறிஸ்துவைப் பார்க்கும் போது தெரிந்துகொள்ள முடியும்.
இயேசுவைப் பார்த்தால் தேவனுடைய குணாதிசயங்களை நம்மால் காண முடியும்.