உண்மையோடு
பல ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைவது அழகானது தான், ஆனால், இந்த வைபவத்தில் கிறிஸ்தவ பாரம்பரியம், அநேக தெய்வங்களை வணங்கும் நம்பிக்கையுடைய சடங்காச்சாரங்களோடு கலந்ததைக் கண்டேன்.
தீர்க்கதரிசி செப்பனியா, உண்மையான தேவன் மீதுள்ள நம்பிக்கை, மற்ற மதங்களோடு கலப்பதைக் கண்டிக்கின்றார். யூத ஜனங்கள் உண்மையான தேவனை ஆராதிப்பவர்கள், ஆனால், மல்காமின் என்ற பிற தெய்வத்தையும் சார்ந்து வாழ்ந்தனர் (செப்பனியா 1:5) செப்பனியா அவர்கள் கைக்கொள்ளுகின்ற, தேவன் இல்லை என்கின்ற கலாச்சாரத்தையும் (வச. 6,12) கண்டிக்கின்றார். அதன் விளைவாக தேவன் யூத ஜனங்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்திவிட்டார்.
ஆனாலும், தேவன் தன் ஜனங்கள் மீது செலுத்தும் அன்பினை விட்டுவிடவில்லை. அவருடைய எண்ணமெல்லாம், அந்த ஜனங்கள் தன்னிடம் திரும்ப வேண்டும் என்பதே. எனவே “தாழ்மையைத் தேடுங்கள்” (2:3) என்கின்றார். அப்பொழுது தேவன் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைப் பேசி, மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதாகக் கூறுகின்றார். “அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக் கொள்வேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்புவேன்” (3:20) என்கின்றார்.
நான் சென்றிருந்த திருமணத்தில் நடந்த சமய இணைப்பை கண்டிப்பது எளிது. ஆனால், உண்மையில் நாம் அனைவரும் தேவனுடைய உண்மையை நம்முடைய கலாச்சார ஊகங்களோடு எளிதாக இணைத்து விடுகின்றோம். தேவனுடைய உண்மையான வார்த்தைகளுக்கு எதிரான நம்பிக்கைகளை நாம் சோதித்து அறியும்படி பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்குத் தேவை. பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தான் நாம் உண்மையினை உறுதியாகவும், உண்மையோடும் தொழுதுகொள்ளும் போது தேவன் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்வார் (யோவா. 4:23-24).
இயேசு என்பவர் யார்?
இயேசு கிறிஸ்து கடவுள் என்ற நம்பிக்கை கிறிஸ்தவத்தின் மையத்தில் இருக்கிறது. ஆனால் இந்த உரிமைகோரல் அநேகருக்குச் சிரிப்புக்கிடமானதாகவே இருக்கிறது. ஆகவே, நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பவற்றையும், நமது நண்பர்களால் அல்லது பெற்றோரால் நமக்குக் கூறப்பட்டவற்றையும் தவிர, உண்மையான இயேசு யார்?
ஒருவரோடொருவர் இணைந்து
பழங்காலத்தில் ஒரு பட்டணத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதாகக் காணப்படின், அது தோற்றுபோன மக்களையும், ஆபத்திற்கும் வெட்கத்திற்குமுள்ளாக்கப்பட்ட ஜனங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படும். எனவேதான் யூத ஜனங்கள் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுகின்றார்கள். எப்படி? ஒருவரோடொருவர் இணைந்து கட்டுகின்றார்கள். இது நெகேமியா 3 ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த 3ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது முதலில் அது நமக்குச் சற்று ஆர்வமில்லாத பகுதியாகத் தோன்றும். யார், எந்த பகுதியை எடுத்துக் கட்டினான் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், சற்று ஆழந்து பார்ப்போமாகில், மக்கள் எவ்வாறு இணைந்து வேலை செய்தனர் என்பதைக் தெரிந்து கொள்வோம். ஆசாரியர்களும் பிரபுக்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். அருகிலுள்ள பட்டணங்களில் வாழ்பவர்களும் வந்து உதவுகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிற பகுதியைப் பழுது பார்கின்றனர். சல்லூமின் குமாரத்திகளும் பிறரோடு இணைந்து வேலை செய்தனர் (3:11) தெக்கோவா ஊரார் இரண்டு பகுதிகளை பழுது பார்க்கின்றனர் (வச. 5,27).
இந்த பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஓன்று அவர்களெல்லாரும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்கிறார்கள். இரண்டாவதாக எவ்வளவு வேலை செய்தனர், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகத்தான் வேலை செய்தனர் என்பதான பாகுபாடின்றி, அவர்கள் அனைவரும் இந்த வேலையில் பங்கு பெற்றதற்காகப் பாராட்டப்படுகின்றனர். செய்த வேலையின் அளவல்ல; பங்கெடுத்தலே போற்றத்தக்கது.
இன்றைய நாட்களில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், உடைந்துபோன சமுதாயத்தையும் பார்க்கின்றோம். வாழ்வு மாற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டும்படியாக இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் வாழ்வை மாற்றும்படி, அவர்களுக்கு இயேசு தரும் புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் காட்டுவோம். நாம் அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படி இடம் இருக்கிறது. எனவே நாம் ஒருவரோடொருவர் இணைந்து பெரிதோ, சிறிதோ நம்முடைய வேலையைச் செய்து, ஓர் அன்பான சமுதாயத்தை உருவாக்கும்படி, ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுவோம்.
வேத வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளும்படிச் செய்ய தேவனாலேயே முடியும்.
சில வருடங்களுக்கு முன் என்னோடு பயணம் செய்த ஒருவர், நான் தூரத்துப் பொருட்களைப் பார்க்கச் சிரமப்படுவதைக் கவனித்து ஒன்று செய்தார். அவர் செய்தது ஒரு சிறிய காரியமாயினும் அது என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய கண்ணாடியை கழற்றி அதை என்னைப் போட்டுப் பார்க்கும்படி கூறினார். நான் அவற்றை பயன்படுத்திய போது, என்ன ஆச்சரியம்! என்னுடைய மங்கலான பார்வை மறைந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடனடியாக நான் ஒரு கண் மருத்துவரை அணுகினேன். அவர் என் பார்வையை சரிசெய்யக் கூடிய ஒரு கண்ணாடியை எனக்குப் பரிந்துரைத்தார்.
இன்றைய வேதாகமம் பகுதி லூக்கா 18, முற்றிலும் பார்வையிழந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடுகிறது. முழுவதும் இருளிலேயே வாழ்ந்து வருகின்ற அவன் தன்னுடைய வாழ்வுக்காக வேண்டும்படி தூண்டப்படுகின்றான். பிரசித்திப் பெற்ற போதகர், அற்புதம் நிகழ்த்துபவர் என்று இயேசுவைக் குறித்த செய்தி அந்த குருட்டுப் பிச்சைக்காரனின் செவிகளை அடைகிறது. அந்த குருடன் அமர்ந்திருக்கின்ற வழியே இயேசு வந்தபோது, அவனுடைய இருதயத்தினுள் நம்பிக்கை எரியத் துவங்குகிறது. “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 37) எனக் கூப்பிடுகின்றான். அவன் வெளியுலகைப் பார்க்கக்கூடாதிருந்தும், அவனுடைய ஆவியின் கண்கள் இயேசுவின் உண்மையான அடையாளத்தை கண்டு கொண்டன. அவனுக்குள்ளிருந்த நம்பிக்கை அவனுடைய தேவையைச் இயேசு சந்திப்பார் என்றது. அவனுடைய நம்பிக்கையின் தூண்டுதலால், இன்னும் சத்தமாக கூப்பிடுகின்றான். “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 38) விளைவு என்ன? அவனுடைய குருட்டுத் தன்மை மாறியது. தன்னுடைய வாழ்விற்காகப் பிச்சையெடுத்தலை விட்டுவிட்டு, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே அவருக்குப் பின் சென்றான் (வச. 43), ஏனெனில், இப்பொழுது அவனால் பார்க்க முடிகிறது.
உன் வாழ்வின் இருண்ட காலங்களில் நீ எங்கே செல்கின்றாய்? எதை நோக்கி அல்லது யாரைக் கூப்பிடுகின்றாய்? கண் கண்ணாடிக்கான பரிந்துரை ஒருவரின் பார்வையை மேம்படுத்திக்கொள்ள உதவலாம். ஆனால், இயேசுவின், தேவனுடைய குமாரனின் கிருபை நிறைந்த தொடுதல் மக்களை ஆவியின் இருளிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டு வருகிறது.
என் கண்களைத் திறந்தருளும்
நான் முதன்முதலாக இஸ்டான்புல் என்ற இடத்திலுள்ள, மிக அழகான சோரா தேவாலயத்திற்குச் சென்றேன். அந்த தேவாலயத்தின் கூரையில் அமைந்துள்ள சித்திரவேலைகள், கற்களிலுள்ள வேலைப்பாடுகளின் மூலம் சில வேதாகமக் கதைகளைப் புரிந்து கொண்டேன். ஆனால், அநேகக் காரியங்களை என்னால் யூகிக்க முடியவில்லை. இரண்டாவது முறை நான் அங்கு சென்ற போது என்னோடு ஒரு வழிகாட்டியும் இருந்தார். அவர் நான் முந்தின முறை பார்க்கத் தவறியவற்றையெல்லாம் காட்டி விளக்கினார். அப்பொழுதுதான் அவையெல்லாம் எத்தனை அர்த்தமுள்ளவையெனப் புரிந்துகொண்டேன். எடுத்துக்காட்டாக, முதல் நுழையும் பகுதியில் லூக்கா சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுவின் வாழ்வு படங்கள் மூலம் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.
சில வேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது அடிப்படை கதையைமட்டும் புரிந்து கொள்வோம். ஆனால், வேதாகமத்தின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள விளக்கங்களைக் சரியாகப் பிணைத்து முழுமையான ஒரு சரித்திரத்தைத் தருவது யார்? நமக்கு வேதாகம விளக்கவுரைகளும் கற்பிக்கும் கருவிகளும் இருக்கின்றன. ஆனால், ஒரு வழிகாட்டியால் தான் நம்முடைய அகக் கண்களைத் திறந்து தேவனைப் பற்றிய அதிசயங்களை வெளிப்படுத்திக் காட்ட முடியும். நம்முடைய வழிகாட்டி பரிசுத்த ஆவியானவரே, அவரே நமக்கு “எல்லாவற்றையும்” (யோவா. 14:26) கற்றுத் தருவார். “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கின்றோம்” (1 கொரி. 2:13) என பவுல் எழுதியுள்ளார்.
புத்தகத்தை எழுதியவரே அவற்றை விளக்கிக் காண்பிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. தேவன் நமக்கு அவருடைய வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் தந்துவிட்டு, அத்தோடு விட்டு விடவில்லை. அவற்றைப் புரிந்துகொள்ள, அவர் நமக்குக் கற்றும் தருகிறார். எனவே நாமும் சங்கீதக்காரனோடு சேர்ந்து கோள்வோம். “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் (சங். 119:18).