Archives: ஜூன் 2018

நேரத்தைச் சொல்லல்

“மேல் நாட்டினர் கைக்கடிகாரம் வைத்திருப்பர். ஆப்பிரிக்கர்களுக்கு நேரமுண்டு” என்று ஓ.எஸ். கின்னஸ் என்பவர் தன்னுடைய “சாத்தியமற்ற மக்கள்” என்ற புத்தகத்தில் ஓர் ஆப்பிரிக்க பழமொழியைச் சுட்டிக்காட்டியிருந்தார். இது, “எனக்கு நேரமில்லை” என்று என்னிடம் கேட்டுக் கொள்பவர்களின் வேண்டுகோளை நான் நிராகரித்ததை குறித்துச் சிந்திக்க வைத்தது. நான், இந்த கொடுமையான அவசரகால அட்டவணைகளும், காலக்கெடுகளும் நம் வாழ்வை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.

சங்கீதம் 90ல் மோசே ஜெபிப்பதைப் பார்க்கின்றோம். “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி. எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” (வச. 12), “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (எபே. 5:15-16) என பவுல் எழுதுகின்றார்.

பவுலும், மோசேயும் நம்மை ஞானத்தோடு காலத்தைப் பயன்படுத்தும்படி சொல்வது, வெறுமனே கடிகாரத்தை கவனிக்கச் சொல்வதாக நினைக்க வேண்டாம். சூழ்நிலை நம்மை ஒரு நெருக்கமான கால அட்டவணையை பின்பற்றும்படி அழைக்கலாம் அல்லது நம்முடைய நேரத்தை பிறருக்குக் கொடுக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்தலாம்.

இந்த உலகில் நாம் கிறிஸ்துவுக்காக நம்மை வேறுபடுத்திக் காட்ட நமக்கு சொற்ப காலம்தான் செலவிடமுடிகிறது. ஆனால், நாம் அந்த சந்தர்ப்பத்தை விரிவாக்கிக்கொள்ள வேண்டும். எப்படியெனில், நம்முடைய கடிகாரங்களையும், திட்டங்களையும் சிறிது நேரத்திற்குத் தள்ளிவிட்டு, கிறிஸ்துவின் பொறுமையோடு கூடிய அன்பை, தேவன் நம் வாழ்வில் நாம் சந்திக்கும்படி கொண்டு வருபவர்களிடம் காட்ட வேண்டும்.

காலத்திற்கப்பாற்பட்ட தேவனின் பெலத்தாலும், கிருபையாலும் வாழுகின்ற நாம் நம்முடைய நேரத்தை நித்தியத்திற்காகச் செலவிடுவோம்.

ஓவ்வொரு நொடிப் பொழுதும்

நான் அடாவைச் சந்தித்தபோது, அவள் தன்னுடைய மரித்துப்போன முழு குடும்பத்தையும், தன்னுடைய நண்பர்களையும் விட்டுவிட்டு ஒரு மருத்துவமனையில் தங்கியிருந்தாள். “முதுமை என்பதுதான் மிகவும் கடினமான பகுதி, நம்மைத் தனியே விட்டுவிட்டு ஒவ்வொருவராக வெளியேறுவதைப் பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறினார். ஒரு நாள் நான் அடாவிடம் எது அவளுக்கு அதிக உற்சாகம் தருவதாக இருக்கின்றது?, எப்படி அவள் நேரத்தைச் செலவிடுகின்றாள் எனக் கேட்டேன். அவள் வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய பகுதியிலிருந்து (பிலி. 1:21) எனக்கு பதில் கொடுத்தாள். “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்றாள். மேலும், “ நான் இங்கிருக்கும் போதும் எனக்கு வேலைகளிருக்கிறது, நான் நன்றாயிருக்கும் போது, இங்கிருக்கின்ற மக்களோடு இயேசுவைப் பற்றி பேசுவேன், என்னால் முடியாத நாட்களில் நான் அவர்களுக்காக ஜெபிப்பேன்” என்றாள்.

பவுல் சிறைச்சாலையிலிருக்கும் போதுதான் பிலிப்பியருக்கு எழுதுகின்றார். நடைமுறையிலுள்ளவற்றை அவர் ஏற்றுக்கொள்ளும் போது தான், அது அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் துன்பங்களைச் சகிக்கும் போது, அவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கிறது. நம்மைப் பரலோகம் வரவேற்பதாகத் தோன்றினாலும், இந்த உலகில் நாம் செலவிட்ட நேரம் தேவனுக்கு முக்கியமானது.

பவுலைப் போன்று அடாவும் தன்னுடைய ஒவ்வொரு மூச்சையும், தேவனுக்குச் சேவை செய்யவும், அவரை மகிமைப்படுத்தவும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக உணர்கின்றார். எனவே அடா தன் நாட்களை பிறரை நேசிப்பதிலும், தன்னுடைய இரட்சகரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் செலவிடுகின்றாள்.

நம்முடைய இருண்ட நாட்களிலும், கிறிஸ்தவர்கள் நித்தியத்தில் தேவனோடு மகிழ்ச்சியில் வாழ்வோம் என்ற வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொள்ளலாம். இங்கு வாழும் போதும் நாம் அவரோடுள்ள உறவினை அநுபவிக்கின்றோம். அவர் நம்முடைய ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மணித்துளியையும் முக்கியமானதாக்கித் தருவார்.

குறைவுள்ள நியாயத்தீர்ப்பு

என்னுடைய கைப்பேசியைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போதே, தெருவில் நடந்து செல்கின்ற எவரையும் சரியாகக்கணித்து விடுவேன். எப்படி இவர்கள் தங்களை மோதவருகின்ற வாகனத்தைக் குறித்துத் தெரியாமலிருக்க முடியும்? நான் என்னையே கேட்டுக் கொள்வேன். அவர்கள் தங்கள் பாதுகாப்பைக் குறித்து கவனம் கொள்வதில்லையா? ஒருநாள், ஓர் நடைப்பாதையின் நுழைவாயிலைக் கடக்கும் போது நான் ஒரு குறுஞ் செய்தியில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது எனது இடப்புறமாக வந்த ஒரு வாகனத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஆனால், அந்த ஓட்டுநர் என்னைக் கவனித்து, சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு என் நன்றி. நான் என்னை நியாயப்படுத்தி, பிறரை குற்றப்படுத்தி பேசியது எனக்கே வந்துவிட்டது. நான் பிறரை நியாயந்தீர்த்தேன். அதே தவறை நான் செய்து அதே தீர்ப்புக்குள்ளானேன்.

என்னுடைய இந்த மாய்மாலமான எண்ணத்தைக் குறித்துத்தான் இயேசுவும் மலைப்பிரசங்கத்தில், “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்” (மத். 7:5) என்றார். என் கண்ணில் ஒரு பெரிய கட்டை போன்ற ஒரு குருட்டு பகுதியிருக்கின்றது. அதன் வழியே நான் பிறரை என்னுடைய குறைவான நியாயத்தீர்ப்பின் மூலம் குற்றப்படுத்துகிறேன்.

“நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” (7:2) எனவும் இயேசு கூறுகின்றார். நான் ஒரு காரின் முன்புறம் நடந்து சென்ற போது, விரைவாக நிறுத்திய அந்த ஓட்டுனரின் முகத்திலிருந்த வெறுப்படைந்த பார்வையை நினைத்துப் பார்த்தேன். தங்கள் அலைபேசியில் மூழ்சியிருக்கும் பிறர் மீது நான் செலுத்தும் வெறுப்படைந்த பார்வையை அது நினைவுபடுத்தியது.

நாம் ஒருவருமே நேர்மையானவர்களல்ல. ஆனால், நாம் சில வேளைகளில் அதை மறந்து, பிறரைத் தீர்ப்பிட அவசரப்படுகின்றோம். நம் அனைவருக்கும் தேவனுடைய கிருபை வேண்டும்.

குழப்பத்தின் மத்தியில் ஆசீர்வாதம்

“நான் இந்த குழப்பத்தினுள் வந்து விட்டேன். எனவே நான் இதைவிட்டு வெளியேறிவிடுகிறேன்” என நான் சில வேளைகளில் எண்ணுவதுண்டு. நான் கிருபையின் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தும், எனக்குத்தகுதியிருக்கும் போது மட்டுமே தேவனுடைய உதவி எனக்குக் கிட்டும் என சில வேளைகளில் நான் நினைக்கும்படி தூண்டப்படுகிறேன்.

தேவன் முதலாவதாக யாக்கோபைச் சந்தித்தவிதம் இதற்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு, இந்த எண்ணத்தை உண்மையற்றதாக்குகிறது.

 யாக்கோபு தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வாழ்வை மாற்றுவதற்கு முயற்சிப்பதில் செலவிடுகின்றான். அவன் இரண்டாவது மகனாகப் பிறக்கின்றான். ஆனால், அந்த நாட்களில் தந்தையின் ஆசீர்வாதம் மூத்தவனுக்குத்தான் சேரும். மூத்தவன் தான்’ செழிப்பான வாழ்வைப் பெறுவான் என நம்பப்பட்டது.

எனவே யாக்கோபு தன்னுடைய தந்தையின் ஆசீர்வாதத்தை எப்படியாகிலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துச் செயல்படுகின்றான். ஏமாற்றுவதன் மூலம் அதில் வெற்றியும் பெறுகின்றான். தன்னுடைய சகோதரனுக்குள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கின்றான் (ஆதி. 27:19-29).

ஆனால், அதன் விளைவாக குடும்பம் பிரிக்கப்படுகிறது. யாக்கோபு கோபத்திலிருக்கும் தன்னுடைய சகோதரனிடமிருந்து தப்பி ஓடுகிறான் (வச. 41-43). இரவு வந்த போது (28:11) யாக்கோபு ஓர் ஆசீர்வாதமான வாழ்க்கையிலிருந்து தான் எத்தனை தூரத்திலிருக்கின்றான் என்பதை உணர்ந்திருப்பான்.

அங்கு தான் யாக்கோபு தான் செய்து வந்த எத்தனங்களையெல்லாம் தள்ளிவிட்டு தேவனைச் சந்திக்கின்றான். தேவன் அவனை ஆசீர்வதிக்க வேண்டுமாயின் தீவிரமான திட்டங்கள் தேவையில்லை என்பதை அவனுக்குத் காண்பிக்கின்றார். அவன் உலகப்பிரகாரமான செல்வங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தேவனிடம் வந்துள்ளான். உலக செல்வங்களையெல்லாம் விட மேலான ஒரு நோக்கத்தை கண்டு கொண்டு (வச. 14) அவனை விட்டு என்றும் நீங்காத தேவனைப் பற்றிக் கொண்டான் (வச. 15).

இது யாக்கோபு தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கற்றுக்கொண்ட பாடம்.

இது நமக்கும் தான். நாம் எத்தனையோ மன வருத்தங்களைச் சுமந்து கொண்டிருக்கலாம். தேவன் நம்மை விட்டு தூர இருப்பதாக நினைக்கலாம். ஆனால், அவர் நம் அருகிலேயே இருக்கின்றார். அவர் நம்மை அருமையாக வழிநடத்தி, நம் குழப்பங்களிலிருந்து வெளியேற்றி அவருடைய ஆசீர்வாதத்திற்குள் கொண்டு வருகின்றார்.

நம்முடைய பாதுகாப்பான இடம்

என்னுடைய முதல் வேலையை நான் ஓர் உணவகத்தில் ஆரம்பித்தேன். ஒரு சனிக்கிழமை மாலையில் ஒரு மனிதன் எங்கள் உணவகம் அருகிலேயே நின்று கொண்டிருந்தான். பின்னர் நான் வேலையிலிருந்து வெளியே வருகின்ற நேரம் எது என்று அவன் என்னிடம் கேட்டான். அது எனக்கு சற்று பயமாக இருந்தது. நேரமாகிய போதும் அவன் பொரியல்களையும், ஒரு பானத்தையும் கட்டளையிட்டான். மேலாளராலும் அவனை வெளியேற்ற முடியவில்லை. நான் மிக அதிக தூரத்திலிருந்து வராவிடினும், என்னுடைய வீட்டிற்குச் செல்ல இரண்டு இருண்ட வாகன நிறுத்தும் இடங்களையும், ஒரு பரந்த மணல்வெளியையும் கடந்து செல்லவேண்டும். கடைசியாக நடு இரவு நேரத்தில் நான் அலுவலகத்திலுள்ள தொலைபேசியில் பேசச் சென்றேன்.

தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்ட என்னுடைய தந்தை, தன்னுடைய படுக்கையிலிருந்து எழுந்து ஐந்து நிமிடத்திற்குள் என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டார்.

என்னுடைய தந்தை எப்படியாயினும் அந்த இரவில் வந்து உதவுவார் என்று எனக்கிருந்த உறுதி, சங்கீதம் 91ல் நாம் வாசிக்கின்ற உத்தரவாதத்தை நினைவுபடுத்தியது. நம் பரலோகத் தந்தை எப்போதும் நம்மோடிருக்கின்றார். நாம் குழப்பத்திலோ, பயத்திலோ அல்லது தேவையிலோ இருக்கும் போது நம்மை பாதுகாக்கின்றார். நம்மீது கரிசனையுள்ளவராயிருக்கின்றார். “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன்” (சங். 91:5) என்று கூறுகின்றார். அவர் நாம் பாதுகாப்பாக ஓடி ஒதுங்குகின்ற இடம் மட்டுமல்ல, அவர் நம்முடைய தங்கும் இடம் (வச. 1) நாம் அடைக்கலமாகத் தங்கிக்கொள்ளும் கன்மலையாயிருக்கின்றார் (வச. 2).

நம்முடைய பயம், அபாயம், அல்லது நிலையற்ற நேரங்களில், தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பி அவரை நோக்கிக் கூப்பிடும் போது, அவர் நமக்கு மறு உத்தரவு அருளிச் செய்து, ஆபத்தில் நம்மோடிருந்து நம்மைத் தப்புவிக்கின்றவராயிருக்கிறார் (வச. 14-15). தேவன் நமக்குப் பாதுகாப்பான தங்குமிடமாயிருக்கிறார்.