நெருக்கமாய் இருத்தல்
என்னுடைய மகளை பள்ளியில் விட்டுவிட்டு நீண்ட தூரம் நடந்து என் வீட்டிற்கு வரும் நேரத்தை, வேதாகமத்திலிருந்து சில வசனங்களை மனப்பாடம் செய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்டேன். அந்தச் சில நிமிடங்களை தேவனுடைய வார்த்தைகளை என் மனதில் நினைத்துப் பார்க்க பயன்படுத்திக் கொள்ளும்போது அந்த வசனங்கள் என் மனதிற்குள் மீண்டும் இரவு நேரங்களில் வருவதுண்டு. அவை எனக்கு மிகுந்த ஆறுதலையும், ஞானத்தையும் தருவதாக அமைந்தன.
வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்குமுன், மோசே அவர்களை ஆயத்தப்படுத்துகின்றார். அவர்கள் தேவனுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் பற்றிக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றார் (உபா. 6:1-2) அவர்கள் செழித்திருக்கும்படி இந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தில் இருக்க வேண்டும். அவைகளைக் குறித்து அவர்களின் பிள்ளைகளோடும் பேசி (வச. 6-7) போதிக்க வேண்டும். அவைகளை கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாகவும் வைக்க வேண்டும். (வச. 8) அவர்கள் தேவனுடைய போதனைகளை மறக்காமல் அதன்படி வாழ்ந்து தேவனை கனம் பண்ணி அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும்படி கூறுகின்றார்.
நீ இன்று தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு வைத்திருக்கின்றாய்? ஒரு யோசனை என்னவெனில், வேதத்திலிருந்து ஒரு வசனத்தை எழுதி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு முறையும் கைகளைக் கழுவும்போதும் அல்லது உணவருந்தும் போதும் அந்த வசனத்தை வாசித்து அதை உன் மனதிற்குள் பதித்து வை. அல்லது படுக்கைக்குச் செல்லுமுன் வேதாகமத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை படிப்பதை அந்த நாளின் கடைசி செயலாக வைத்துக் கொள். இவ்வாறு வேத வசனங்களை நம் இருதயத்தில் வைத்துக்கொள்ள அநேக வழிகளுள்ளன.
ஆரம்பத்திற்கு முன்பு
‘‘தேவனுக்கு துவக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவர் எப்பொழுதும் இருக்கிறாரெனின் நம்மைப் படைப்பதற்கு முன் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவருடைய நேரத்தை எவ்வாறு செலவிட்டார்?” தேவனுடைய நித்திய வாழ்வைப் பற்றி விளக்கும் போது, ஒரு முன் யோசனையுள்ள ஞாயிறு பள்ளி மாணவன் இக்கேள்விகளைக் கேட்டான். நான் அவனிடம், இது சற்று விளங்கிக்
கொள்ளமுடியாத கருத்து என பதிலளித்தேன். ஆனால், சமீபத்தில் இக்கேள்விக்கான விடையை வேதாகமத்திலிருந்து கற்றுக் கொண்டேன்.
யோவான் 17ல் இயேசு பிதாவிடம் ஜெபிக்கும்போது ‘‘பிதாவே, உலகதோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தீர்” (வச. 24) எனக் குறிப்பிடுகிறார். இதில் இயேசு நமக்குப் பிதாவை வெளிப்படுத்துகின்றார். அவர் இவ்வுலகை படைத்து, அதை அரசாட்சி செய்யுமுன்னரே தேவன் தன் குமாரனை ஆவியில் நேசித்த ஒரு தந்தையாயிருந்தார். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது தேவன் தம்முடைய ஆவியை ஒரு புறாவைப் போல அனுப்புகின்றார். மேலும் ‘‘இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத். 3:17) என்றும் சொல்கின்றார். தேவனின் அடிப்படைப் பண்பு இந்த வாழ்வு தரும் அன்பில் வெளிப்படுகின்றது.
தேவனைப் பற்றிய இந்த உண்மை நமக்கு எத்தனை அன்பையும், ஊக்கத்தையும் தருவதாகவுள்ளது. திருத்துவத்திலுள்ள பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இம்மூவரும் ஒருவரிலொருவர் செலுத்தும் அன்பு தான் நாம் தேவனின் தன்மையைப் புரிந்து கொள்ளக்கூடிய முக்கிய கருத்தாகும். காலத்தின் துவக்கத்திற்கு முன்பாக பிதாவாகிய தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? தன்னுடைய குமாரனை பரிசுத்த ஆவியின் மூலம் அன்பு செய்தார். தேவன் அன்பாகவேயிருக்கிறார்” (1 யோவா. 4:8). இந்தக் காட்சி நாம் இதனைப் புரிந்து கொள்ள உதவியாயிருக்கிறது.
நமது கண்ணோட்டத்தில் சிறிய மாற்றம்
முப்பது ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரிய குளிரை என்னுடைய பட்டணம் அனுபவித்தது. முடிவில்லாத பனியை மணிக்கணக்காக தோண்டியெடுத்ததால் என் தசைகளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்தன. பயனளிக்காத முயற்சியால் சோர்வடைந்து என்னுடைய பூட்ஸ்சுகளை உதறிவிட்டு வீட்டினுள்ளே சென்ற போது, நெருப்பின் வெப்பத்தாலும், அதனைச் சுற்றியிருந்த என் குழந்தைகளாலும் வாழ்த்தப் பெற்றேன். வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியே பார்த்தபோது, அந்த குளிர்காலத்தினை நான் பார்த்த கோணம் முற்றிலும் மாறிப்போனது. இன்னமும் அதிக வேலையிருக்கிறது என்று காண்பதை விட்டுவிட்டு, நான் அந்தப் பனி, மரக்கிளைகளிலும், நிலப்பரப்பின் மீதும் வெண்மையாய் பரம்பியிருப்பதைப் பார்த்து மகிழ ஆரம்பித்தேன்.
சங்கீதம் 73ல் ஆசாபின் வார்த்தைகளை வாசிக்கும்போது, இதைப் போன்று, இன்னும் அதிக வருத்தத்தைத் தரக்கூடிய காலத்தைக் காண்கின்றோம். ஆரம்பத்தில் அவர், இவ்வுலகில் தவறிழைப்பவர்கள் செழித்திருப்பதைக் கண்டு புலம்புகிறார். பெருங்கூட்ட மக்களிடமிருந்து மாறுபட்டு, பிறருடைய நலனுக்காக வாழ்வதால் பயனென்ன என சந்தேகிக்கின்றார் (வச.13). ஆனால் அவர் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழையும்போது, அவருடைய கண்ணோட்டம் மாறுகிறது (வச. 16-17). தேவன் இவ்வுலகையும் அதன் பிரச்சனைகளையும் திறம்படக் கையாளுவார் என்பதை நினைக்கின்றார். எனவே நாம் எப்பொழுதும் தேவனோடு இருப்பதே நல்லது என்கின்றார் (வச.28).
இவ்வுலகத்திலுள்ள தீராத பிரச்சனைகளை நாம் காணும்போது நாம் உறைந்துவிடுகிறோம். நாம் தேவனுடைய ஸ்தலத்தினுள் ஜெபத்தின் மூலம் பிரவேசித்து, நம்முடைய வாழ்வையும், நம்முடைய கண்ணோட்டத்தையும் மாற்றுகின்ற அவருடைய உண்மையைக் கண்டுபிடிப்போம். அது நம்மை பெலப்படுத்தும். அவருடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் நம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை. நம்முடைய சூழ்நிலைகள் மாறப் போவதில்லை. ஆனால், நம்முடைய கண்ணோட்டத்தை நாம் மாற்றிக் கொள்வோம்.
ஏக்கத்தோடு தேவனைத் தேடல்
ஒரு நாள் என்னுடைய மகள், எங்களது ஒரு வயது நிரம்பிய பேரனோடு, எங்களைப் பார்க்க வந்திருந்தாள். ஒரு சிறிய வேலையினிமித்தம் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தமானேன். ஆனால் நான் அந்த அறையை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்ததும், என்னுடைய பேரன் அழ ஆரம்பித்தான். இது இரு முறை நடந்தது, ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் திரும்பி வந்து அவனோடு சிறிது நேரம் செலவிட்டுச் செல்வேன், மூன்றாவது முறை நான் வெளியே செல்ல முயற்சித்த போது, அந்த சிறிய உதடுகள் கதற ஆரம்பித்தன. அந்நேரம் என் மகள் ‘‘அப்பா, நீங்கள் அவனை உங்களோடு அழைத்துச் செல்லக் கூடாதா?” என்று கேட்டாள்.
அதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது எல்லா தாத்தாக்களுக்கும் தெரிந்திருக்கும். என்னுடைய பேரனும் என்னோடு பயணித்தான், ஏனெனில், நான் அவனை நேசிக்கிறேன்.
நம்முடைய இருதயத்தில் தேவனை நோக்கி நாம் கொண்டுள்ள ஏக்கங்களெல்லாம் அன்போடு சந்திக்கப்படும் என்பது எத்தனை நன்மையானது. வேதம் நமக்குக் கூறுவது, ‘‘தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” (1 யோவா. 4:16). நாம் எதையோ செய்ததாலோ அல்லது செய்யாததாலோ தேவன் நம்மீது
அன்புகூரவில்லை. தேவனுடைய அன்பு நம்முடைய தகுதியைச் சார்ந்தது அல்ல, ஆனால் தேவனுடைய நன்மையையும் உண்மையையுமே சார்ந்தது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அன்பற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கும்போது, நாம் என்றும் மாறாத தேவனுடைய அன்பையே நம்முடைய நம்பிக்கைக்கும், சமாதானத்திற்கும் மூல காரணராகச் சார்ந்து கொள்வோம்.
நம்முடைய பரலோகத் தந்தை, அவருடைய மகனையே நமக்குப் பரிசாகத் தந்து, பரிசுத்த ஆவியையும் அருளினதின் மூலம், நம்மீதுள்ள அவருடைய அன்பை விளங்கப்பண்ணினார். தேவன் நம்மை என்றும் மாறாத அன்போடு அன்பு கூருகிறார் என்ற உறுதி நமக்கு எத்தனை ஆறுதலைத் தருகிறது.
எதிர்பார்ப்போடு காத்திருத்தல்
ஒவ்வொரு மே தினத்தன்றும் (மே 1) இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டில், அதிகாலை வேளையில் வசந்த காலத்தை வரவேற்க ஒரு கூட்ட மக்கள் திரண்டு விடுவர். காலை 6 மணிக்கு மேக்டலின் கோபுரத்தின் உச்சியிலிருந்து, மேக்டலின் கல்லூரி பாடகர் குழுவினர் பாடுவார்கள். அந்த இரவைக் கடந்து
வெளிவரும் பாடல்களையும், மணியோசையையும் எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பர்.
ஆரவாரத்தோடு காத்திருப்பவர்களைப் போன்று நானும் காத்திருக்கின்றேன். நான் என் ஜெபத்திற்கு வரும் பதிலுக்காகவும், தேவனின் வழி நடத்துதலுக்காகவும் காத்திருக்கின்றேன். எந்த நேரம் என் காத்திருத்தல் முடியும் என்று தெரியாதிருந்தும், எதிர்பார்ப்போடு காத்திருக்கக் கற்றுக் கொண்டேன். இருண்ட இரவுகளைப் போன்ற சூழ்நிலைகளை, ஆழ்ந்த கவலையோடு எதிர் நோக்குவதாக சங்கீதக்காரன், சங்கீதம் 130ல் கூறுகிறான். ஜாமக்காரனைப் போல, துன்பங்களின் மத்தியில் தேவன் மீது நம்பிக்கையாயிருப்பதைத் தெரிந்து கொண்டான். ‘‘எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (வச. 6).
தேவன் உண்மையுள்ளவர் என்பதின் மீதுள்ள எதிர்பார்ப்பு, இருளினூடே, துயரங்களின் மத்தியில், அதைத் தாங்கக் கூடிய பெலனைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையை சங்கீதக்காரனுக்குக் கொடுக்கிறது. இருளினூடே ஒரு சிறு ஒளிக்கதிரைக் கூட காணாதிருந்தும், வேதாகமம் முழுவதும் காணப்படுகின்ற வாக்குத்தத்தங்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கை அவருடைய காத்திருத்தலுக்கு பெலனளிக்கிறது.
ஒரு வேளை நீயும், இருளின் நடுவேயிருப்பாயாயின் சோர்ந்து போகாதே, விடியல் வருகிறது. அது இந்த வாழ்விலோ அல்லது பரலோகத்திலோ, தெரியாது. ஆனால் நம்பிக்கையை விட்டுவிடாதே. தேவன் தரும் விடுதலைக்காக விழித்திருந்து காத்திரு. தேவன் உண்மையுள்ளவர்.