வாழ்க்கையில் சில வேளைகளில் அடிவிழுகிறது. சில வேளைகளில் அற்புதங்கள் நிகழுகின்றன. பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வாலிபர்கள், அத்தேசத்தின் பயப்படத்தக்க ராஜாவின் முன் நின்று தைரியமாக எந்த சூழ்நிலையிலும் அவர் நிறுத்திய பொற்சிலையை வணங்குவதில்லை என்று அறிவிக்கிறார்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து, ‘‘தேவன், எரிகிற அக்கினிச் சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும் நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை. நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்வதுமில்லை” எனக் கூறினர் (தானி. 3:17-18).
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களையும் கட்டி எரிகிற அக்கினிச் சூளையிலே போட்டனர். ஆனால், தேவன் அற்புதமாக அவர்களை விடுவித்தார். அவர்களின் தலைமயிர் கருகாமலும் அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும் இருந்தன. (வச. 19-27). அவர்கள் சாகவும் தயாராயிருந்தனர். அவர்கள் தேவன் மீது வைத்திருந்த நம்பிக்கையில் தளரவில்லை. தேவன் எங்களை விடுவிக்காவிட்டாலும்… என்று உறுதியாயிருந்தனர்.
நாம் தேவனைப் பற்றிக்கொள்ள, அவர் விரும்புகிறார். ஒருவேளை நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை தேவன் குணப்படுத்தாவிடினும், நம் வேலையை இழந்தாலும், நாம் துன்புறுத்தப்பட்டாலும் தேவனைப் பற்றிக் கொள்வோம். சில வேளைகளில் தேவன் இவ்வாழ்வின் துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்து விடலாம் அல்லது விடுவிக்காமற்போகலாம். ஆனால், ‘‘நாம் ஆராதிக்கும் தேவன் எல்லாம் செய்ய வல்லவர்” என்பதை உறுதியாகப் பற்றிக் கொள்வோம். விடுவிக்காவிட்டாலும் நம்முடைய ஒவ்வொரு சோதனையின் மத்தியிலும் தேவன் நம்மோடிருக்கிறார். நம்மை நேசிக்கிறார்.
தேவனாலே எல்லாம் கூடும்.