என்னுடைய சிநேகிதி கேரியின் ஐந்து வயது மகள் மைஜா. ஒரு புதிய முறையில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெவ்வேறு விதமான பொம்மைகளை ஒன்றாக வைத்து, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விளையாடுவது மிகவும் விருப்பமான ஒன்று. அவளுடைய கற்பனை உலகத்தில் எல்லாம் ஒன்றுக்கொன்று சொந்தமானவை. அவர்களே அவளுடைய ஜனங்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறு வடிவம், நிறம் உருவத்திலிருந்தாலும் ஒன்றாயிருக்கும்போது தான் மகிழ்ச்சியாயிருப்பர் என நம்பினாள்.

அவளுடைய படைப்பாற்றல், தேவன் சபையில் விரும்பும் ஒன்றினை நினைவுபடுத்துகின்றது. பெந்தெகொஸ்தே என்ற நாளில் ‘‘வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம் பண்ணினார்கள்” (அப். 2:5) என லூக்கா சொல்கின்றார். இந்த ஜனங்கள் வெவ்வேறு கலாச்சாரம், பாஷைக்காரராயிருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர் வந்து அவர்களை ஒரு புதிய சமுதாயமாக்கினார். அன்றிலிருந்து சபை அவர்களை ஒரே சரீரமாக, இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இணைக்கின்றது.

இயேசு இவ்வுலகில் இருந்தபோது ஒன்றாக இணைந்த ஒரு கூட்ட மனிதர்களே, அவருடைய சீடர்களே, இந்தச் சமுதாயத்தின் தலைவர்கள். இயேசு அவர்களை இணைக்காதிருந்தால், அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கவே முடியாது. இப்பொழுது இன்னும் அதிகமானோர், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் (2:41) கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இணைந்தனர். ஒரு காலத்தில் பிரிந்திருந்த இந்த குழுவினர் இப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் இணைக்கப்பட்டனர். அவர்கள் ‘‘சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்” (வச. 44). அவர்கள் தங்களுக்குரிய யாவற்றையும் பிறரோடு
பகிர்ந்துகொள்ளத் தயாராயிருந்தனர்.

பரிசுத்த ஆவியானவர் மக்கள் பிரிவுகளுக்கிடையே பாலமாக அமைந்து அவர்களை இணைக்கின்றார். நாம் எப்பொழுதும் மற்றவர்களோட இணைந்து எளிதாக அவர்களைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் கிறிஸ்துவின் விசுவாசிகளாக நாம் இணைந்து கொள்கின்றோம்.