Archives: ஏப்ரல் 2018

தேவனை அறியும் அறிவு

எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.

ஒரேயொரு நொடி

விஞ்ஞானிகள் நேரத்தைப் பற்றி அதிக கவனம் கொண்டிருப்பார்கள். 2016-ஆம் ஆண்டின் இறுதியில், மேரிலாண்ட் பட்டணத்தின் கோட்டார்ட் விண்வெளி மையத்தைச் சார்ந்த பிரமுகர்கள் அந்த வருடத்துடன் ஒரு வினாடியை கூட்டினார்கள். அந்த வருடம் ஒருவேளை உங்களுக்கு சற்றே நீண்டதாய் இருந்திருந்தால், உங்கள் கணிப்பு சரியே.

அவர்கள் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ஏனெனில், பூமியின் சூழற்சி வேகம் காலத்தின் ஓட்டத்தில் குறைவதால், வருடங்கள் வழக்கத்தைவிட சற்றே நீண்டதாய் அமையும். மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கருவிகளை கவனிக்க விஞ்ஞானிகள் நேரத்தை மில்லி செகன்ட் அளவுக்கு துல்லியமாய் கணக்கிடவேண்டும். ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கவே இவர்கள் இப்படி துல்லியமாய் செயல்படவேண்டியுள்ளது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.

நம்மில் அநேகருக்கு, ஒரு நொடி கூடுவதும் குறைவதும் பெரிய வித்தியாசத்தை உண்டாக்குவதில்லை. ஆனாலும், வேதத்தின் அடிப்படையில், நம்முடைய நேரமும் அதனை நாம் பயன்படுத்தும் விதமும் மிகவும் முக்கியமானது. 1 கொரிந்தியர் 7:29-ல், பவுல் “இனிவரும் காலம் குறுகினது” என்றே நமக்கு நினைப்பூட்டுகிறார். தேவனுடைய பணியைச் செய்வதற்கான நேரம் “குறைவானது”, ஆகையால் நாம் நம் நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டும். “நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் (எபே. 5:16)” என்று பவுல் வலியுறுத்துகிறார்.

விஞ்ஞானிகளைப் போல் நாமும் ஒவ்வொரு வினாடியையும் கணக்கிடவேண்டும் என்பதல்ல அதன் பொருள். வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையைப் (சங். 39:4) பார்க்கும்போது, நம்முடைய நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டியதின் முக்கியத்துவத்தை அது நமக்கு நினைப்பூட்டுகிறது.

பாடுவதற்கான காரணம்

எனக்கு பதிமூன்று வயதிருக்கும்போது, என் பள்ளி மாணவர்கள் இல்லற பொருளாதாரம், கலை, பாடகர்குழு மற்றும் தச்சுவேலை எனும் தலைப்புகளில் நான்கு ஆராய்ச்சி பாடங்களை படிக்கவேண்டியதாயிருந்தது. பாடகர்குழு பாடத்தின் முதல்நாளில், பயிற்றுனர் ஒவ்வொரு மாணவனையும் பியானோ இசைக்கு பாடவைத்து அவர்களுடைய குரலை கேட்டு அவரவரின் சுருதிக்குத் தக்க அவர்களை பிரித்து ஒரு அறையில் அமர்த்தினார். என்னுடைய முறை வந்தபோது, பியானோவில் அவர்கள் திரும்ப திரும்ப வாசித்த இசைக்குறிப்புகளுக்கு நான் பாடினாலும், எந்த ஒரு பிரிவிற்கும் நேராக என்னை அவர் நடத்தவில்லை. மாறாக, பல முயற்சிகளுக்குப் பின், ஆலோசனை மையத்திற்கு சென்று வேறொரு பாடத்தை தெரிந்தெடுக்கச் சொன்னார். அந்த நிமிடத்திலிருந்து, நான் இனி பாடக்கூடாது, என் குரல் எந்த பாடலிலும் தொனிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கும் மேலாக இதே எண்ணத்தை கொண்டவனாக இருந்த நான் என் வாலிப வயதில் ஒருமுறை சங்கீதம் 98-ஐ வாசிக்கலானேன். அதன் ஆக்கியோன் “கர்த்தருக்குப் பாடுங்கள்” (சங். 98:1) என்கின்ற அழைப்புடன் அதனை ஆரம்பிக்கிறார். பாடவேண்டிய காரணத்திற்கும் நம் குரலின் தரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் தம் பிள்ளைகள் பாடும் பாடல்களிலே அவர் பிரியப்படுகிறார். “அவர் செய்த அதிசயங்களுக்காக” (வச. 1) நாம் அவரைப் பாடவேண்டும் என்று நம்மை அழைக்கிறார்.

கர்த்தரை நாம் நம் முழுசிந்தையோடும், பாடல்களோடும் ஆனந்தகளிப்புடன் துதிப்பதற்கு இரண்டு அற்புதமான காரணங்களை சங்கீதக்காரர் குறிப்பிடுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவன் நிறைவேற்றும் இரட்சிப்பின் கிரியை மற்றும் இடைவிடாமல் தொடரும் அவருடைய உண்மைக்காகவும் அவரைப் பாடவேண்டும். தேவனுடைய பாடகர்குழுவில், அவர் நமக்காய் செய்த அதிசயங்களைப் பாடுவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு.

நமது புயலின் நடுவே

பயங்கர புயல்காற்று, மிரட்டும் மின்னல், மோதியடிக்கும் அலைகள். சாவின் விளிம்பை தொட்டுவிட்ட உணர்வு. தாத்தாவுடன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான் அங்கேயே நெடுநேரம் தங்கிவிட்டேன். மாலையில் சூரியன் மறைந்ததும் வீசின சூரைக்காற்றினால் எங்கள் படகு பயங்கரமாய் தத்தளித்தது. படகு கவிழாமல் இருக்க அதன் முன்பகுதியில் உட்காரவேண்டும் என்று தாத்தா அறிவுறுத்தினார். திகில் உள்ளத்தை கவ்வியது. ஆனாலும், எப்படியோ, நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது பதினான்கு.

தேவனுடைய ஆறுதலையும் பாதுகாப்பையும் வேண்டினேன். புயல் ஓய்ந்தபாடில்லை, ஆனாலும் நாங்கள் எப்படியோ தப்பி கரையேறினோம். அன்றைக்கு அந்த இரவு புயலில் உணர்ந்த தேவபிரசன்னத்தின் நிச்சயத்தை இன்னொருமுறை உணர்ந்தேனா என்று தெரியவில்லை.

புயல்கள் இயேசுவுக்கு புதியவைகள் அல்ல. மாற்கு 4:35-41 வசனங்களில் இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து, இன்னும் சற்றுநேரத்தில் பயங்கர புயல் வீசப்போகும் ஒரு ஏரியை கடந்துபோகச் சொன்னார். அன்றைக்கு இரவு வீசின கோரப்புயல் அந்த முரட்டு மீனவர்களை ஒரு கை பார்த்தது. தாங்கள் சாகப்போகிறோம் என்றே நினைத்தார்கள். ஆனாலும் இயேசு கடலை அமரச்செய்து தம்முடைய சீடர்களை ஆழமான விசுவாச அனுபவத்திற்கு நேராக நடத்தினார்.

அதேபோல்தான் நம்முடைய புயல்களின் நடுவே அவரை நம்பும்படிக்கு அவர் நம்மை அழைக்கிறார். சில சமயங்களில் அவர் அற்புதமாய் காற்றையும், அலைகளையும் அமைதிப்படுத்துகிறார். சில வேளைகளில் அதற்கு இணையான இன்னொரு அற்புதத்தையும் நிகழ்த்துகிறார்: நம்முடைய இருதயங்களை ஸ்திரப்படுத்தி அவரை நம்பத் துணைபுரிகிறார். “இரையாதே! அமைதலாயிரு” என்று அலைகளை பார்த்து கட்டளையிடக்கூடிய வல்லமை தம்மிடமுண்டு என்பதை நாம் விசுவாசித்து பலப்படவேண்டும் என்று விரும்புகிறார்.

ஒருவர் பாடுபட்டால், எல்லோரும் பாடுபடுவார்கள்

உடன்பணியாளர் ஒருவர் தன் சரீரத்தில் பயங்கர வலியினால் கஷ்டப்படுகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அலுவலகத்தில் உள்ள அனைவரும் கலங்கினர். மருத்துவமனைக்கு சென்று ஒருநாள் ஓய்வெடுத்து வேலைக்கு திரும்பினதும், அவர் தன் வலிக்கான காரணம், சீறுநீரகக் கல் என்றார். அந்த கல்லை ஞாபகார்த்தமாய் மருத்துவரிடம் பெற்றவர் என்னிடமும் காட்டினார். அதைக் கண்ட நான் அவருக்காக பரிதபித்தேன், அநேக ஆண்டுகளுக்கு முன் பித்தப்பை கல்லினால் நான் பட்ட கஷ்டம் என் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே கொடுமையான வலி அது.

இவ்வளவு சிறிய ஒரு பொருள் சரீரமுழுவதிலும் ஒரு மோசமான வேதனையை கொடுக்கமுடியும் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? ஆனாலும், ஒருவிதத்தில் 1 கொரிந்தியர் 12:26-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இதனையே குறிப்பிடுகிறார்: “ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்...”. பன்னிரெண்டாம் அதிகாரம் முழுவதும் பவுல் சரீரத்தை உருவகப்படுத்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் நிலையை விளக்குகிறார். “தேவனே சரீரத்தின் அவயவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து அமைத்துள்ளார்” என்று சொல்லுகையில் அவர் கிறிஸ்துவின் சரீரத்தை குறிப்பிடுகிறார் – அனைத்து கிறிஸ்தவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான வரங்களும் பொறுப்புகளும் உண்டு. ஆனாலும், நாமெல்லாரும் ஒரே சரீரத்தைச் சேர்ந்த அவயங்களாக காணப்படுவதால், ஒருவர் பாடுபடும்போது, எல்லோரும் பாடுபடுகிறோம். நம்முடைய கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி உபத்திரவம், துக்கம் மற்றும் போராட்டங்களை சந்திக்கும்போது, நாமும் அந்த வேதனையை அனுபவிப்பதால் நாமும் பாடுபடுகிறோம்.

என் சகபணியாளரின் வலி தன் சரீரம் சுகமடைவதற்கு தேவையான உதவியை பெற அவரைத் துரத்திற்று. கிறிஸ்துவின் சரீரத்திலும், ஒருவருடைய வலி நம்முடைய மனதை உருக்கி பாதிக்கப்பட்டவருக்கு எதையாவது செய்யவேண்டும் என்கின்ற மனதுருக்கத்தை நமக்குள் மூட்டிவிடுகிறது. நாம் ஜெபிக்கலாம், உற்சாகமூட்டக்கூடிய வசனத்தை சொல்லலாம் அல்லது குணப்படுத்தும் வழிமுறையில் உதவக்கூடிய எதையாகிலும் செய்யலாம். அப்படித்தான் சரீரத்தின் அவயவங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும்.