எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.