சகோதரி கிரேஸ் ஒரு விசேஷமான மங்கை. அவளைக் குறித்து நான் நினைக்கும்போதெல்லாம் ஒரு வார்த்தை என் மனதில் எழும்பும்: சமாதானம். அவளுடைய முகத்தில் காணப்படும் அமைதியான, ஆரவாரமற்ற தோற்றம். நான் அவளை அறிந்த இந்த ஆறு மாதத்தில் அது மாறவேயில்லை. பயங்கரமான ஒரு நோயின் காரணமாக அவளுடைய கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இவளுடைய முகநாடி வேறுபடவில்லை.

சகோதரி கிரேஸிடம் அவளுடைய சமாதானத்தின் ரகசியம் என்னவென்று விசாரித்தபோது, அவள் சொன்னாள், “அது ரகசியமல்ல, அது ஒருவர், இயேசு, எனக்குள் இருப்பதே என்றாள். இந்தப் புயலின் நடுவில் நான் உணர்ந்திடும் இந்த அமைதியை விவரிக்க வேறு வார்த்தை இல்லை”

நம்முடைய சமாதானத்தின் ரகசியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட உள்ள உறவு. அவரே நம் சமாதானம். இயேசு நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாய் இருக்கும்போது, நாம் மேன்மேலும் அவரைப் போல் மாறும்போது, சமாதானம் உண்மையானதாகிறது. வியாதி, பொருளாதார நெருக்கடி அல்லது ஆபத்துகள் நம்மை சந்திக்கலாம், ஆனாலும் தேவன் தம்முடைய கரங்களிலே நம்மைத் தாங்குகிறார் (தானி. 5:23) என்பதை சமாதானம் உறுதிசெய்கிறது. ஆதலால், காரியங்கள் நன்மையாகவே முடியும் என்று நம்பிடலாம்.

எல்லா அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத இந்த சமாதானத்தை நாம் அனுபவித்திருக்கிறோமா? சகலமும் தேவனுடைய கட்டுப்பாட்டிலேதான் உள்ளது என்கின்ற உள்ளான நம்பிக்கை நமக்குண்டா? இன்றைக்கும் நான் ஒவ்வொருவருக்கும் சொல்லவிரும்பும் வாழ்த்து அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றது “சமாதானத்தின் கர்த்தர்தாமே உங்களுக்கு சமாதானத்தை தந்தருளுவாராக.” இந்த சமாதானத்தை நாம் “எல்லா வேளைகளிலும் எல்லா விதத்திலும்” உணர்ந்திடுவோமாக (2 தெச. 3:16).