Archives: மார்ச் 2018

புல்தரையா அல்லது கிருபையா

என்னுடைய நண்பன் ஆர்ச்சி விடுமுறைக்குப்பின் தன் வீட்டிற்குத் திரும்பின போது, அவனுடைய அண்டை வீட்டுக்காரன் ஒரு மரவேலியை இவனுடைய நிலத்தினுள் ஐந்து அடி உள்ளே அமைத்திருப்பதைக் கண்டான். அந்த மரவேலியை நகர்த்தும்படி அண்டை வீட்டுக்காரனிடம் சொல்லி பல வாரங்கள் கடந்தன. என் நண்பன் அந்த நகர்த்தும் வேலையில் உதவுவதாகவும். பாதி செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லிப் பார்த்தான். ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆர்ச்சி இதனைக் குறித்து பொது வேலை அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கலாம். ஆனால் அவனுடைய அண்டை வீட்டுக்காரன் தேவனுடைய கிருபையைப் பற்றி சற்றேனும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக, அவன் இந்த உரிமையை விட்டு விட தீர்மானித்து, அந்த வேலி அப்படியேயிருக்க அனுமதித்தான்.

“ஆர்ச்சி ஒரு கோழை” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவன் ஓர் உயர்ந்த, வலுவான மனிதன். அவன் ஒரு சிறு புல்தரையை விட கிருபையை விரும்பினான்.

நான் ஆபிரகாமையும், லோத்துவையும் நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களின் மந்தைகளின் பெருக்கம், அவர்கள் ஒருமித்து குடியிருக்க அந்த பூமி தாங்கக் கூடாதிருந்தது. எனவே ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும், லோத்துவின் மந்தை மேய்ப்பருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும், பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள் (ஆதி. 13:7). லோத்து அந்த பகுதியில் மிகச் சிறந்ததை தேர்ந்து கொண்டான். முடிவில் எல்லாவற்றையும் இழந்தான். ஆபிரகாம் மீதியானதை எடுத்துக் கொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பெற்றான் (வச. 12-17).

நமக்கு உரிமையிருக்கிறது. நாம் அதனை கேட்டுப் பெற முடியும், சிறப்பாக பிறருடைய உரிமை அதில் இணைந்திருக்கும்போது நாம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியும். சில வேளைகளில் நாம் அவற்றை வலியுறுத்த வேண்டியுள்ளது. பவுலும் சனகெரிப் சங்கம் சட்ட விரோதமாக செயல்பட்டபோது (அப். 23:1-3) உரிமை கோரினார். ஆனால் நாம் விட்டுக் கொடுக்கத் தேர்ந்து கொள்ளும்போது இவ்வுலகிற்கு ஒரு சிறந்த வழியைக் காட்ட முடியும். இதனையே வேதாகமம் “சாந்தம்” என்றழைக்கிறது. பலவீனம் என்றல்ல பெலமும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.

தேவன் நம்மை நிரப்பும் போது

நான் என்ன செய்தேன்? இது என் வாழ்வை மிகவும் களிகூரச் செய்த நேரமாயிருந்திருக்க வேண்டும். அதிலும் நான் தனிமையில் தள்ளப்பட்ட நேரம், என்னுடைய கல்லூரி படிப்பிற்குப் பின்னர் எனக்கு கிடைத்த முதல் வேலை. நான் வளர்ந்த பட்டணத்திலிருந்து சில நூறு மைல்களுக்கப்பால் உள்ள ஓர் இடத்தில் கிடைத்தது. ஆனால் அந்த முதல் அடியின் சுகம் சீக்கிரத்தில் மறைந்தது. எனக்கு ஒரு சிறிய தங்கும் இடம் கிடைத்தது. அதில் இருக்கைகள் மற்றும் படுக்கைகள் இல்லை. அந்தப் பட்டணம் நான் இதற்கு முன் அறியாத இடம். அங்கு யாரையும் எனக்குத் தெரியாது. அந்த வேலை எனக்கு ஆர்வமளிப்பதாக இருந்தும், தனிமை என்னை மிகவும் வாட்டியது.

ஓர் இரவில் நான் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன். நான் என்னுடைய வேதாகமத்தைத் திறந்தேன். சங்கீதம் 16ல் நிலைத்து விட்டேன். அதில் வசனம் 11ல் தேவனுடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம் உண்டு எனக் கூறுகிறது. நான், தேவனே இந்த வேலை எனக்குச் சரியானது தான். ஆனால் நான் தனிமையை உணருகிறேன். தயவு கூர்ந்து நான் உம்முடைய சமூகத்தை உணரும்படிச் செய்யும் என ஜெபித்தேன். நான் இந்த வேண்டுதலை வெவ்வேறு வகைகளில் சில வாரங்களாகச் செய்தேன். சில இரவுகள் கடந்த போது என்னுடைய தனிமை உணர்வு சற்று தணிந்தது. நான் தேவனுடைய பிரசன்னத்தை ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்தேன். சில இரவுகளில் தனிமையாகப் பிரிக்கப்பட்ட வேதனையை இன்னும் உணர்கிறேன்.

நான் இந்த வார்த்தையை மீண்டும் வாசிக்கும் போது, ஒவ்வொரு இரவும் என் இருதயம் இந்த வசனத்தில் நிலைத்து விடும். தேவன் படிப்படியாக என் நம்பிக்கையை ஆழப்படுத்தினார். அவருடைய உண்மையை, இதற்கு முன் அனுபவியாத விதத்தில் உணர்ந்தேன். என்னுடைய வேலை, என்னுடைய இருதயத்தை நான் அவரிடம் ஊற்றும்படியாக கொடுக்கப்பட்ட வேலை என்பதைக் கற்றுக் கொண்டேன். அவருடைய வாக்கின் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய ஆவியில் என்னை நிரப்பும்படி, நான் பொறுமையாக அவருடைய செயலுக்காகக் காத்திருக்கின்றேன்.

தேவனுக்கு விலையேறப் பெற்றவர்கள்

அவருடைய பெயர் டேவிட். ஆனால் அநேகர் அவரை தெரு வயலின்காரர் எனக் கூப்பிடுவதுண்டு. டேவிட் ஒரு வயோதிபர், எப்பொழுதும் பரட்டைத் தலையோடு எங்கள் பட்டணத்தின் பிரபல இடங்களில், வழக்கமாக தன்னுடைய வயலின் மீட்டும் திறமையினால் கடந்து செல்வோரை கவரும் ஓர் இசைக் கலைஞன். அவருடைய இசைக்குப் பதிலாக அப்பகுதியைக் கடந்து செல்வோர் ஒரு சில ருபாய்களை, நடைபாதையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அவருடைய வயலின் பெட்டியில் போடுவர். டேவிட் புன்னகையோடு தன் தலையைத் தாழ்த்தி நன்றி தெரிவித்து விட்டு, தன்னுடைய இசையைத் தொடர்வார்.

சமீப காலத்தில் டேவிட் மரித்து விட்டார். அவருடைய இரங்கல் செய்தி அங்குள்ள நாளேட்டில் வந்திருந்தது. அதில், அவர் அநேக மொழிகளைப் பேசுபவரெனவும், ஒரு புகழ் பெற்ற பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவரெனவும், அந்த தேச செனட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடைய வெளித் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிட்ட சிலர் அவருடைய சாதனைகளைக் கேட்டு, தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

‘‘தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27) என வேதாகமம் சொல்லுகிறது. இது நாம் நமக்குள்ளாகவே ஒரு மதிப்பைக்கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மதிப்பு நம்முடைய வெளிப்புற தோற்றத்தையோ, நாம் எதை அடைந்துள்ளோம் என்பதையோ, அல்லது பிறர் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையோ பொருத்ததல்ல. நாம் பாவத்தில் சிக்குண்டு தேவனை விட்டு விலகினாலும், தேவன் நம்மை மிகவும் நேசித்து, மதித்து அவருடைய ஒரே பேரான சொந்தக் குமாரனை அனுப்பி, இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவும், அவரோடு நித்தியத்தில் வாழவும் வழியைக் காட்டினார்.

நாம் தேவனால் நேசிக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அவருக்கு விலையேறப் பெற்றவர்கள். நாம் நம்முடைய அன்பை பிறரோடு பகிர்ந்து, நாம் தேவன் மீது வைத்துள்ள அன்பைக் காட்டுவோம்.

தொலைபேசி மண்டலம்

கைபேசியின் ஒரு முக்கிய நன்மையென்னவெனின், நாம் பிறரோடு தடையில்லாமல் எங்கேயிருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும். அதன் விளைவாக அநேகர் வாகனங்களை ஓட்டும்போதும் பேசுகின்றனர், குறுஞ் செய்திகளை அனுப்புகின்றனர். அதன் விளைவாக பயங்கர, வாகன விபத்துக்களைச் சந்திக்கின்றனர். இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்க, உலகின் பல பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது உள்ளாகும் கவனச் சிதறலை சட்ட விரோதமானதாக அறிவித்திருக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு உதவியாக கைப்பேசி மண்டலத்தைத் தெரிவிக்கும் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் சாலையை விட்டு விலகி வந்து பாதுகாப்பாக கைபேசியில் பேசவும், மனம் விரும்பிய செய்திகளை அனுப்பவும் முடியும்.

இது வாகனம் ஓட்டும்போது கைப்பேசியை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு நல்ல திட்டமாகும். இன்னொரு வகையான தொடர்பு சாதனமுண்டு. அதற்கு கட்டுப்பாடு இல்லை. அதுதான் ஜெபம். தேவன் நம்மை எங்கிருந்தாலும், போகும் போதும், வரும் போதும் அல்லது உட்கார்ந்திருந்தாலும் அவரைக் கூப்பிடச் சொல்லுகிறார். புதிய ஏற்பாட்டில் பவுல் தேவனோடு தொடர்பு கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்லுவது, ‘‘இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” (1 தெச. 5:17). மேலும் பவுல் ‘‘எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்;” (வ.16), எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்” (வச. 18) என்று ஊக்கப்படுத்துகின்றார். தேவன் நம்முடைய மகிழ்ச்சியையும், நன்றியறிதலையும் தேவன் மீதுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகவும், மேலும் கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் தொடர்ந்து ஜெபத்தில் பாதுகாப்பாகவும் இருக்க அழைக்கின்றார்.

நம்முடைய அவசர குரலுக்கும் அல்லது ஒரு நீண்ட உரையாடலுக்கும் தேவன் எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றார். நாம் அவரோடு நம்முடைய மகிழ்ச்சி, நன்றியறிதல், தேவைகள், கேள்விகள் மற்றும் நம்முடைய ஆவல்களையும் தொடர்ந்து, முடிவில்லாமல் பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கின்றார் (எபி. 4:15-16) நாம் எப்பொழுதும் ஜெப மண்டலத்திலிருக்கிறோம்.