என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர், எங்களைப் போன்று, தங்களுடைய வாலிபப் பெண்ணை ஒரு கார் விபத்தில் இழந்தார். ஒரு நாளேட்டில் தன்னுடைய மகள் லின்ட்சேயுக்கு அஞ்சலி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், அவளுடைய நினைவாக நிறைய படங்களை அவருடைய வீட்டினைச் சுற்றி வைத்திருப்பதைக் குறிப்பிட்டிருந்ததோடு, இந்த வலிமை வாய்ந்த வாசகத்தையும் எழுதியிருந்தார். அது, அவள் எங்கும் இருக்கின்றாள். ஆனால் எங்குமே இல்லை என்பது.

எங்களுடைய பெண் பிள்ளைகள் இன்னமும் படத்திலிருந்து, எங்களைப் பார்த்து சிரிப்பது போல இருந்தும், அந்த உயிரோட்டமான நபர்கள், அந்தச் சிரிப்பைத் தருபவர்கள் எங்கேயுமே காணப்படவில்லை. அவர்கள் எல்லா இடத்திலும் – எங்கள் இருதயத்தில், எங்கள் எண்ணங்களில், அந்த படங்களில் இருந்தாலும், அவர்கள் எங்கேயுமேயில்லை.

ஆனால் வேதாகமம் குறிப்பிடுவது, கிறிஸ்துவுக்குள் லின்ட்சேயும், மெலிசாவும் உண்மையில்; எங்குமேயில்லாமல் போய் விடவில்லை. அவர்கள் இயேசுவின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள். தேவனோடு இருக்கிறார்கள் (2 கொரி. 5:8). அவர்கள் உண்மையில் எங்குமிருக்கிற, ஆனால் எங்கும் காணப்படாதவரோடு இருக்கிறார்கள். நாம் தேவனை உடல் வடிவில் காண முடியவில்லை. தேவன் சிரிப்பதைப் போன்ற படங்கள் நம் வீட்டில் இல்லை. உன் வீட்டைச் சுற்றி தேடிப் பார்த்தாலும் அவர் எங்குமேயில்லை. ஆனால் இதற்கு மாறானது தான் உண்மை. அவர் எங்குமிருக்கிறார்.

இந்த புவியில் நாம் எங்கு சென்றாலும் தேவன் அங்கு இருக்கிறார். அவர் எல்லாவிடத்திலும் நம்மை வழி நடத்தவும் பெலப்படுத்தவும், தேற்றவும் இருக்கின்றார். அவரில்லாத இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. நாம் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் எவ்விடத்திலும் இருக்கிறார். நாம் எதிர் நோக்கும் ஒவ்வொரு சோதனையின் போதும் இது நமக்கு ஒரு சிறந்த செய்தியாக உள்ளது.