என்னுடைய முகநூல் நண்பர்கள் பதிக்கும் விருப்பமான படங்களில், விலங்கினங்களுக்கிடையேயான அசாதாரண நட்பினைக் குறித்தப் படம் அடிக்கடி இடம் பெறும். ஒரு நாய் குட்டியும் பன்றியும், ஒரு மானும் பூனையும், நண்பர்களாயிருப்பதைக் கவனித்தேன். மற்றொரு படத்தில் ஒரங்குட்டான் என்ற வாலில்லாத குரங்கு அநேக புலிக்குட்டிகளைத் தாயைப் போல அரவணைப்பதைப் பார்த்தேன்.
இத்தகைய, மனதிற்கு இதமான, அசாதாரண நட்பினைப் பார்க்கும் போது, அது எனக்கு ஏதேன் தோட்டத்தின் விளக்கத்தை நினைவுபடுத்தியது. அந்த தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் தேவனோடு ஒருமனதோடு வாழ்ந்தனர். தேவன் அவர்களுக்கு தாவரங்களை உணவாகக் கொடுத்தமையால், விலங்குகளும் அவர்களோடு ஒருமித்து வாசம் செய்தன என நான் எண்ணுகிறேன் (ஆதியாகமம் 1:30). ஆனால் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த போது, இந்த இனிமையான காட்சி கலைந்தது (3:21-23). இப்பொழுது மனிதரிடையேயும் படைப்புகளிடையேயும் தொடர்ந்து பகைகளும், போராட்டங்களும் இருப்பதைக் காணலாம்.
ஆனாலும் ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு நாள் ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும் ஒருமித்திருக்கும் (11:6) என்று உறுதியளிக்கின்றார். இயேசு மறுபடியும் வந்து அரசாட்சி செய்யும்போது இது நடக்கும் என அநேகர் விளக்கமளிக்கின்றனர். அவர் மீண்டும் வரும்போது பிரிவினைகள் கிடையாது. மரணமில்லை… வருத்தமில்லை. முந்தினவைகள் ஒழிந்து போயின (வெளி. 21:4). அந்த புதிய பூமியில் படைப்புகள் யாவும் முந்திய ஒற்றுமைக்குள் கொண்டு வரப்படும். வெவ்வேறு ஜாதி, நாடு, மொழி பேசும் ஜனங்கள் யாவரும் ஒருமித்து தேவனை ஆராதிப்பார்கள் (7:9-10 ; 22:1-5).
அதுவரையும் தேவன் நமக்கு உடைந்து போன உறவுகளைப் புதுப்பிக்கவும், புதிய எதிர்பாராத நட்புகளை உருவாக்கவும் உதவுவார்.
ஒருநாள் தேவன் இவ்வுலகை பூரண சமாதானத்திற்குள் மீட்டுக் கொள்வார்.