லின்னஸ் என்று சுருக்கமாக அழைக்கப் பெறும் லின்னஸ் வான் பெல்ட் என்பவர் “பீநட்ஸ்” கேலி சித்திரப் பகுதியின் முக்கியத் தூணாகச் செயல்படுபவர். அவரிடம் வேடிக்கையும், புத்திசாலித்தனமும் இருந்தும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்ற அவர், தன்னோடு எப்பொழுதும் ஒரு பாதுகாப்பு போர்வையை எடுத்துச் செல்வார். இந்த போர்வையின் மூலம் நாம் அவரை அடையாளம் காணலாம். நமக்குள்ளேயும் பயம் உண்டு, பாதுகாப்பற்ற நிலையையும் உணர்கின்றோம்.

இயேசுவின் சீடன் பேதுருவுக்கு பயத்தைக் குறித்து சற்று தெரியும். இயேசுவை கைது செய்தபோது பேதுரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இயேசுவைப் பின் தொடர்ந்து பிரதான ஆசாரியனின் முற்றம் வரையும் சென்றார். அதன் பின்பு அவர் பயத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய அடையாளத்தை மறைக்க பொய்யும் கூறினார் (யோவா. 18:15-26). அவர் அவ சொற்களைப் பேசியதுடன் தன்னுடைய தேவனை மறுதலிக்கவும் செய்தார். ஆனாலும் தேவன் பேதுருவை நேசிப்பதை விடவில்லை. இறுதியில் அவரை முற்றிலுமாக மீட்டுக் கொண்டார் (யோவா. 21:15-19).

1 பேதுரு 4:8ல் பேதுரு அன்பை வலியுறுத்தக் காரணம், அவர் இயேசுவின் ஆழ்ந்த அன்பை அனுபவித்தவர். அதனாலேயே அவர் நம்முடைய உறவுகளில் அன்பினை அதிக முக்கியத்துவப்படுத்தி எல்லாவற்றிற்கும் மேலாக என்று குறிப்பிடுகிறார். அந்த வசனத்தின் தீவிரம் மேலும் தொடர்ந்து ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும் என்கின்றது.

உனக்கு எப்பொழுதாகிலும் இத்தகைய போர்வை தேவைப்பட்டதா? எனக்கு தேவைப்பட்டது. ஏதாவது ஒன்றை சொன்ன பின்னர் அல்லது செய்த பின்னர், நான் அதற்காக மனம் வருந்தி குற்ற உணர்வையும், அவமானத்தையும் உணர்ந்ததுண்டு. சுவிசேஷங்களில் குறிப்பிட்டுள்ளபடி, இயேசுவும் அவமானத்தாலும் ஏமாற்றத்தாலும் நிறைந்த மக்களை அன்பினால் போர்த்தியது போல, நானும் அன்பினால் போர்த்தப்பட வேண்டியவன்.

இயேசுவைப் பின்பற்றுபவர்கள் கருணையுடனும் தைரியத்துடனும் மற்றவர்களைத் தேற்றவும், மீட்கவும், அன்பென்னும் போர்வையைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய மாபெரும் அன்பினைப் பெற்ற நாம் பிறருக்கு அதனைக் கொடுப்போம்.