‘‘இது புற்று நோய்’’ இந்த வாத்தைகளை என் தாயார் என்னிடம் கூறியபோது, நான் என்னைத் திடப்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆனால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வார்த்தைகளை நாம் ஒருமுறை கூட கேட்க விரும்பமாட்டோம். ஆனால் என் தாயாருக்கு இது மூன்றாவது முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேமோகிராம், பையாப்ஸி எடுப்பதன் மூலம் என் தாயார் தனக்கு புயத்தின் கீழே கேடு விளைவிக்கும் கட்டி உருவாகியிருக்கிறதென தெரிந்து கொண்டார்.
என் தாயாருக்கு கெட்ட செய்தியாக வந்த போதிலும் அவர்கள் என்னைத் தேற்றும்படியாகிவிட்டது. அவருடைய செயல்பாடு என் கண்களைத் திறந்தது. ‘‘தேவன் எனக்கு நல்லவராகவே இருக்கிறார். அவர் எப்பொழுதும் உண்மையுள்ளவர்’’ எனக் கூறினார். அவர்கள் கடினமான அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு சிகிச்சை, என சந்தித்தபோதும் தேவ பிரசன்னத்தையும் அவரின் உண்மையையும் உறுதியாகப் பெற்றுக் கொண்டார்.
யோபுவைப் போன்று, தன் பிள்ளைகள், செல்வம், சுகம் யாவற்றையும் இழந்த செய்தியைக் கேட்ட போது (யோபு 1:20) அவர் செய்தது, ‘‘அவன் தரையிலே விழுந்து பணிந்து கொண்டான்.’’ ‘‘தேவனை தூஷித்து ஜீவனை விடும்’’; என்று அவன் மனைவி கூறிய போது ‘‘தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெற வேண்டாமோ?’’ (யோபு 2:10) என்கின்றான். எத்தனை உறுதியான தீர்மானம். பின்பு யோபு குறை கூறின போதும், பின்னர் தேவன் மாறாதவர் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறான். தேவன் தன்னோடு இருக்கிறார். அவர் தன்னை கவனிக்கிறார் என யோபு நம்பினான்.
துன்பம் வரும்போது துதித்தல் என்பது அநேகருக்கு வருவதில்லை. சில வேளைகளில், சில சூழ்நிலைகளில் வேதனைகள் நம்மை மேற்கொள்ளும் போது நாம் கோபத்தாலும் பயத்தாலும் இழுக்கப்படுகிறோம். ஆனால் என் தாயாரின் செயலை கவனிக்கும் போது தேவன் இன்னமும் நல்லவராகவே இருக்கிறார். அவர் கடின நேரங்களில் நமக்கு உதவுகிறார் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.
நம்முடைய மிகத் தாழ்வின் போதும் நம்முடைய கண்களை அவருக்கு நேராக ஏறெடுப்போம்.