இயேசு தேவனுடைய மகிமையின் பிரகாசம் (எபிரெயர் 1:3). அவரை அறிந்தவர்கள் அவருடைய மகிமையைக் கண்டார்கள் (யோவான் 1:14).
பழைய ஏற்பாட்டில், கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. (யாத்திராகமம் 40:34-35). இஸ்ரவேல் புத்திரர் இந்த மகிமையால் வழி நடத்தப்பட்டனர்.
முடிவு காலத்தில், நகரத்திற்கு வெளிச்சங் கொடுக்கச் சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. (வெளிப்படுத்தல் 21:23) என தேவன் வாக்களித்துள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள தேவனுடைய மகிமையானது மிகவும் வியப்பைத் தருவதுதாகும்.
தேவன் படைத்த இப்புவியில் நாம் வாழும் போது அவருடைய மகிமையினை நாம் அவ்வப்போது காண முடியும் என வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துவதே அவருடைய மகிமை. நாம் தேவனை காண முடியாது. ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை அவருடைய படைப்பாகிய இந்த பிரமாண்டமான அண்டத்திலும், நம்முடைய பெரிய இரட்சிப்பிலும், நம்முடைய வாழ்வில் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தாலும் உணர முடிகிறது.
இன்றும் அவருடைய வல்லமையின் ஆதாரங்களையும், அவருடைய மகிமையையும் இயற்கையின் அழகிலும், ஒரு குழுந்தையின் சிரிப்பிலும், பிறர் நம்மீது காட்டும் அன்பிலும் காணலாம். தேவன் இப்பொழுதும் இப்பூமியை அவருடைய மகிமையால் நிரப்புகிறார்.
நாம் இப்பொழுதும் எப்பொழுதும் தேவனுடைய மகிமையை காணவும் அனுபவிக்கவும் முடியும்.