சில வேளைகளில் மற்றவர்களின் வலிமையான தாக்கத்தால் நம்முடைய வாழ்வு ஒரு கணத்தில் மாறி விடுகிறது. “ராக்அன்ட்ரோல்” நடன மேதை புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின் கடினமான குழந்தைப் பருவத்திலும், மன அழுத்தத்தால் தொடர்ந்து கஷ்டப்பட்ட நாட்களிலும் ஒரு இசைக் கலைஞனின் படைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒருவருடைய வாழ்வை மூன்றே நிமிடங்களில் சரியான பாடல் மூலம் மாற்ற முடியும் என்ற தன் பாடலின் உண்மையை தன் அனுபவத்தின் மூலம் புரிந்து கொண்டார்.

வாழ்வு மாற்றத்தைத் தரும் ஒரு பாடலைப் போன்று, சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளும் நம்பிக்கையையும் வாழ்வு மாற்றத்தையும் தர முடியும். நம்மில் அநேகர் தங்கள் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்கிய சில உரையாடல்களை பகிர்ந்து கொள்ள முடியும். நமது உலகத் கண்ணோட்டத்தை மாற்றிய ஒரு ஆசிரியரின் வார்த்தைகள், நமது நம்பிக்கையை உயிர்ப்பித்த உற்சாகமூட்டும் வார்த்தைகள், ஒரு நண்பனின் கனிவான வார்த்தைகள், கடின நேரங்களைக் கடக்க உதவியது.

இதனால்தான் நீதிமொழிகளின் புத்தகம் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் காத்து, அதனை ஞானமாய் பயன்படுத்தும்படி அதிக இடங்களில் வலியுறுத்துகிறது. சொற்களை வெறுமையான பேச்சுக்களாக வேதாகமம் கருதுவதில்லை. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். (நீதி. 18:21) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில வார்த்தைகளாலேயே சிலரின் ஆவியை நொறுக்க முடியும் அல்லது ஞானமும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளால் பிறருக்கு ஊட்டத்தையும் பெலத்தையும் கொடுக்க முடியும் (15:4).

நம்மில் எல்லோருக்கும் வல்லமையான இசையை உருவாக்க முடியாது. ஆனால் எல்லோரும் தேவ ஞானத்தைப் பெற்று பிறருக்கு நல் வார்த்தைகளால் உதவி செய்ய முடியும். (சங். 141:3) நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நம் வார்த்தைகளின் மூலம் தேவன் சிலரின் வாழ்வை மாற்ற முடியும்.