அநேகரைப் போல நானும் போதிய உடற்பயிற்சி கிடைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்தேன். சமீபத்தில், நான் நடப்பதற்கு என்னை ஊக்குவிப்பதற்கு எனக்கொன்று கிடைத்தது – அது நடையை எண்ணும் கருவி. இது ஒரு எளிய முறை. ஆனால் வியத்தகு வகையில் இந்த கருவி என்னை ஊக்குவிக்கின்றது. படுக்கையிலிருந்து எழும்புவதற்கு முறுமுறுப்பதை விட்டு விட்டு, ஒரு சில அடிகள் நடப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பம் எனக் கருத முடிந்தது. என்னுடைய குழந்தைக்கு ஒரு குவளை நீர் எடுத்துக் கொடுத்தல் போன்ற அனுதின வேலைகளைச் செய்வது என்னுடைய இலக்கினை அடைய சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இந்த வகையில், என்னுடைய கருவி என்னுடைய எண்ணங்களையும், நோக்கங்களையும் மாற்றி விட்டது. இப்பொழுது நான் இன்னும் அதிகம் நடக்க எப்பொழுதெல்லாம் முடியும் என எதிர்பார்த்திருக்கிறேன்.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வும் சற்று இதனைப் போன்ற ஒன்றுதான் என நான் அதிசயிக்கிறேன். கொலோசெயர் 4:5ல் பவுல் கொடுக்கும் ஆலோசனைப்படி பிறரை அன்பு செய்யவும், அவர்களுக்கு உதவவும், அவர்களோடு உறவாடவும் நமக்கு அனுதினமும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அத்தகைய வாய்ப்புகளைக் குறித்து விழிப்புணர்வுடையவர்களாக இருக்கிறோமா? தினமும் உரையாடல்களுக்கு கவனம் செலுத்தி பிறரை ஊக்கப்படுத்துபவனாகக் காணப்படுகின்றேனா? நாம் தொடர்பு கொள்கிற நமது உறவினர், உடன் வேலை செய்வோர், மளிகை கடையிலுள்ள கணக்கர் போன்ற ஒவ்வொருவரின் வாழ்விலும் தேவன் நம்மூலம் கிரியை செய்கின்றார். ஒவ்வொரு உரையாடலும் தேவன் செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒரு சிற்றுண்டி சாலையில் பணிபுரியும் பணியாளரை பரிவோடு விசாரித்தல் போன்ற சிறிய காரியங்களையும் ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

தேவன், நம் அனுதின வாழ்வில் தருகின்ற வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், ஏனெனில் அவை தேவன் செயல்படும் கணங்களாக இருக்கலாமே!