Archives: ஜனவரி 2018

தாமதத்தைக் கையாளுதல்

ஓர் உலகளவிலான கணினி அமைப்பின் செயலிழப்பினால், பரவலாக விமான சேவைகள் ரத்தாகி, ஆயிரக்கணக்கான பிரயாணிகள் விமானநிலையத்தில் தவித்தனர். ஒரு பனிபுயலின்போது ஏற்பட்ட வாகன விபத்துக்களால் பல பிரபல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. ஒரு நபர் தான் “இப்பொழுதே செய்கிறேன்” என்று வாக்களித்ததைச் செய்யத் தவறினார். இப்படிப்பட்ட விளைவுகளால் ஏற்படும் தாமதம் பெரும்பாலும் கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்கும். ஆனால், இயேசுவை பின்பற்றுபவர்கள், உதவிக்கு அவரை நோக்கிப்பார்க்கக் கூடிய சலுகையைப் பெற்றுள்ளோம்.

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் பொறுமைக்கு பெரிய எடுத்துக்காட்டு யோசேப்பு. அவன் தன் பொறாமை கொண்ட சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்றுப் போடப்பட்டான். தன் எஜமானனின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டு, எகிப்தில் சிறையில் அடைபட்டான். “யோசேப்பு சிறைச் சாலையில் இருந்தான். கர்த்தரோ யோசேப்போடே இருந்தார்” (ஆதி. 39:20-21). சில வருடங்களுக்குப் பின், யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களின் அர்த்தத்தைக் கூறியபோது, அவனை எகிப்து தேசம் முழுமைக்கும், பார்வோனுக்கு அடுத்தப்படியான அதிகாரியாக்கினான் (அதிகாரம் 41).

ஒரு பஞ்சத்தின் போது யோசேப்பின் சகோதரர் அவனிடம் தானியம்கொள்ள வந்தபோது, அவனுடைய பொறுமைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்தது. “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினர்… ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்” (45:4-5,8).

நமக்கு ஏற்படும் தாமதம் குறுகியதோ, அல்லது நீண்டதோ, யோசேப்பைப் போன்று தேவன் மீது விசுவாசத்தோடு காத்திருக்கும் போது, நாம் பொறுமையையும் முன்னோக்குப் பார்வையையும், சமாதானத்தையும் பெற்றுக் கொள்வோம்.

நன்றியறிதலை வளர்த்துக் கொள்ளல்

நீ நன்றியுள்ள ஓர் உணர்வை வளர்த்துக் கொள்ள விரும்புகிறாயோ? பதினேழாம் நூற்றாணடில் வாழ்ந்த பிரிட்டனைக் சேர்ந்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட், தன்னுடைய நன்றியுணர்வு என்ற பாடலின் இலக்கை அடைய உற்சாகப்படுத்துகிறார். “நீர் எனக்கு மிக அதிகமானவைகளைக் கொடுத்திருக்கிறீர் இன்னுமொன்றை, நன்றியுணர்வுள்ள இருதயத்தைத் தாரும்.” என்ற பாடல்கள் மூலம் தன் வாசகர்களிடம் ஊக்குவிக்க விரும்பினார்.

ஹெர்பர்ட், நன்றியோடிருக்க அவருக்குத் தேவையான ஒன்றைக் கண்டு கொண்டார். அது தேவன் அவருக்குத் தந்திருக்கின்ற ஆசிர்வாதங்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வு.

இயேசு கிறிஸ்துவே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் ஊற்று என்று வேதாகமம் நமக்குத் தெரிவிக்கின்றது. ரோமர் 11:36ல் “சகலமும்; அவராலும் அவர் மூலமாயும அவருக்காகவும் இருக்கிறது” எனச் சொல்லப்பட்டுள்ளது. “சகலமும்” என்பது ஆடம்பர மற்றும் இவ்வுலகில் ஒவ்வொரு நாள் வாழ்விற்கும் தேவையான அனைத்து நன்கொடைகளையும் குறிக்கும். நம் வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நன்மையும் நம் பரலோகத் தந்தையிடமிருந்து வருகிறது (யாக். 1:17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பினால், விருப்பத்தோடு இந்த நன்கொடைகளைத் தருகிறார்.

என்னுடைய வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதங்களைக் குறித்த விழிப்புணர்வை நான் விரிவாக்கிக்கொள்ளுவதற்கு, நான் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கின்ற மகிழ்ச்சிக்கு காரணர் என் தேவனே என்பதை ஒப்புக் கொள்ளக் கூடிய இருதயத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன். நான் பெற்றுக் கொண்ட நன்மைகள் என்னுடைய முயற்சியால் பெற்றுக் கொண்டவையல்ல. இன்றைக்கு நான் அனுபவிக்கும் நன்மைகள்: ஒரு மென்மையான காலையில் நான் ஓடுவதும், மாலைப் பொழுதில் என் நண்பர்களோடு செலவிடுவதும், என் சமையல் பொருட்கள் அறையில் நிரப்பப்பட்டுள்ள பொருட்களால், நான் என் மகள்களோடு செய்துகொள்ளும், பிரெஞ்ச் டோஸ்ட், நான் என் ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்க்கும் போது கிடைக்கின்ற அழகும், புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான காப்பியின் நறுமணமும், இவையெல்லாம் தேவன் தரும் ஆசீர்வாதங்களே.

இதுவரை தேவன் எனக்குத் தந்துள்ள மிக அதிகமான நன்மைகள் எவை? அவைகளைக் காணும்படி நம் கண்களைத் திறப்போமாகில் ஒரு நன்றியுணர்வுள்ள இருதயத்தை உருவாக்கிக்கொள்வோம்.

ஜெபத்தின் வல்லமை

ஒரு நாள், எனக்கு நெருங்கிய நபர் ஒருவரின் நலனைக்குறித்து ஆழ்ந்த கரிசனையோடிருந்த போது, பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, இஸ்ரவேலரின் ஞானமுள்ள தலைவன் சாமுவேலின் சரித்திரம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. தேவனுடைய ஜனங்கள் துன்பங்களைச் சந்தித்தபோது, சாமுவேல் அவர்களுக்காக எவ்விதம் தேவனிடம் பரிந்து பேசுகிறார் என்பதை வாசிக்கும் போது நானும், நான் நேசிக்கின்ற ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும் என்ற மனநிலையை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

இஸ்ரவேலர் பெலிஸ்தரின் அச்சுறுத்தலை எதிர் நோக்கினர். இதற்கு முன்னர் பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர், ஏனெனில் இஸ்ரவேலர் தேவனை நம்பவில்லை (1 சாமு. 4). அவர்கள் தங்கள் பாவத்திற்காக மனம்வருந்திய போது, பெலிஸ்தியர் தங்களைத் தாக்க வருகிறார்கள் என கேள்விப்படுகின்றனர். இம்முறை அவர்கள் சாமுவேலிடம் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்கின்றனர் (7:8) தேவன் தெளிவாக பதிலளித்து, எதிரிகளிடையே குழப்பத்தை உருவாக்கினார் (வச. 10). பெலிஸ்தியர் இஸ்ரவேலரைக் காட்டிலும் வல்லவர்களாயிருந்தும், தேவன் அவர்களெல்லாரையும் விட பெலனுள்ளவராக இருந்தார்.

நாம் நேசிக்கின்றவர்கள் நிமித்தம் சவால்களைச் சந்தித்து வேதனையில் இருக்கும் போது, அந்த சூழ்நிலை மாறப்போவதில்லை என்ற பயம் நம்மை ஆட்கொண்டு தேவன் செயல்படமாட்டார் என்று அவநம்பிக்கைக் கொள்ள நாம் தள்ளப்படலாம். ஆனால், ஜெபத்தின் வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிட வேண்டாம். நம்மீது அன்புள்ள தேவன் நம்முடைய வேண்டுதல்களைக் கேட்கிறார். நம்முடைய மன்றாட்டுகளைக் கேட்கிற அவர் எவ்விதம் செயல்படுவார் என்பதை நாம் அறிவோம். ஆனால், நமக்குத் தெரியும், நம்முடைய பரமதந்தை, நாம் அவருடைய அன்பை ஏற்றுத் தழுவி, அவர் உண்மையுள்ளவர் என்பதில் நாம் நம்பிக்கையாயிருக்கும்படி அவர் ஏங்குகின்றார்.

இன்றைக்கு நீ ஜெபிக்க வேண்டியவர்கள் யாராவது உண்டா?

ஓற்றுமையை நாடுதல்

1950 ஆம் ஆண்டு முதல் நான் வளர்ந்த பட்டணத்தின் அனுதின வாழ்வில் உட்புகுந்திருந்த இனவெறி, மற்றும் பிரிவினைகளைக் குறித்து நான் கவலைப்பட்டதேயில்லை. பள்ளிகளிலும், உணவகங்களிலும், பொது போக்குவரத்து சாதனங்களிலும், அருகில் வசிப்பவர்களிடையேயும் வெளிப்புறத் தோல் நிறத்தின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டிருந்தனர்.

1968 ஆம் ஆண்டு நான் அமெரிக்க ஐக்கிய இராணுவ அடிப்படை பயிற்சியில் சேர்ந்த போது, என்னுடைய இந்த அணுகுமுறை மாறியது. என்னுடைய படையில், வெவ்வேறு கலாச்சாரத்திலிருந்து வந்த இளைஞர்களைச் சேர்த்திருந்தனர். நாங்கள் எங்களுடைய பணியின் நோக்கத்தை அடைவதற்கு எங்களுக்குள் புரிந்துகொள்ளல், ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளல், இணைந்து பணிபுரிதல் ஆகியவை தேவை என்பதை முதலில் கற்றுக் கொண்டோம்.

முதலாம் நூற்றாண்டில் கொலோசெயிலுள்ள சபைகளுக்கு பவுல் எழுதும் போது சபை அங்கத்தினரிடையேயிருந்த வேறுபாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவர்களுக்கு “அதிலே கிரேக்கனென்றும், யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், இல்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்” (கொலோ. 3:11) என எழுதுகிறார். ஒரு குழுவில் மேலோட்டமான, மற்றும் ஆழ்ந்த வேறுபாடுகள் எளிதாக மக்களை பிரித்துவிடும், எனவே பவுல் அவர்களிடம், “உருக்கமான இரக்கத்தையும் தயவையும், மனத் தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொள்ளுங்கள்” (வச. 12) என்கிறார். இத்தகைய நற்குணங்களோடு அன்பையும் தரித்துக் கொண்டால், அது அனைவரையும் ஒன்றாக இணைக்கும் என்பதை “இவை எல்லாவற்றின் மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்” (வச: 14) என்று கூறுகிறார்.

இந்த கொள்ளைகளை செயல்படுத்தும் போது தேவன் நம்மை அழைத்த நோக்கத்தைச் செயல்படுத்தத்துவக்குகிறோம். விசுவாசிகளாகிய நாம் அனைவருக்கும் பொதுவாயிருப்பது, நாம் அவர் மீது வைத்திருக்கும் அன்பு, அதனடிப்படையில் கிறிஸ்துவில், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கத்தினராகிய நாம் புரிந்துகொள்ளலையும், சமாதானத்தையும், ஓற்றுமையையும் நாடிப் பெற்றுக்கொள்ளுவோம்.

நம்மிடையேயுள்ள அற்பமான வேறுபாடுகளிடையே, கிறிஸ்துவுக்குள் மிகப்பெரிய ஒற்றுமையைத் தேடிப் பெற்றுக்கொள்வோம்.