என்னுடைய இளைய மகளும் நானும் சேர்ந்து ஆடும் ஒரு விளையாட்டை ‘பின்சர்ஸ்’ என்று அழைப்போம். அவள் மாடிப்படிகளில் மேலே செல்லும்போது, நான்  அவளைத் துரத்திப் பிடித்து ஒரு சிறிய ‘கிள்ளு’ கொடுப்பேன். விதி என்னவெனின், நான் அவளை படிக்கட்டிலேறும் போது மட்டும் தான் கிள்ள வேண்டும். (அதுவும் மெதுவாக) அவள் படியேறி மேலே சென்றுவிட்டால் அவள் பாதுகாப்பாகி விடுவாள். சில வேளைகளில் அவளுக்கு விளையாடக் கூடிய எண்ணம் இல்லாதிருக்கும் போது, நான் அவளைத் தொடர்ந்து படியேறிவிட்டால், அவள் உறுதியாகச் சொல்லிவிடுவாள், “கிள்ளு கிடையாது” என்று நானும் சம்மதித்து, “கிள்ளு கிடையாது, நான் வாக்களிக்கிறேன்” என்பேன்.

இன்றைய காலங்களில் இந்த வாக்குகொடுத்தல் ஒரு சிறிய காரியமாகிவிட்டது. நான் என்ன சொல்லுகிறேனோ அதைச் செய்யும் போது, என் மகள் என்னுடைய குணத்தைக் குறித்துச் சற்று புரிந்து கொள்கின்றாள். என்னுடைய நிலையான குணத்தை அறிந்து கொள்கின்றாள். என் வார்த்தைகள் நலமானவை, எனவே என்னை நம்பலாம் என்று அவள் தெரிந்து கொள்கின்றாள். நாம் வாக்களித்ததை செயல்படுத்துவது என்பது ஒரு சிறிய காரியம்தான். ஆனால், வாக்குகளும் அவற்றைச் செயல்படுத்துவதும்தான் உறவுகளை வளர்க்கின்றன என நான் சொல்லுவேன். அவைதான் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் அடித்தளம்.

இப்படியே பேதுருவும் கருதுகின்றார். எனவே தான் அவர், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நம்மை “அவருடைய திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்படி (2 பேதுரு 1;4) பெலப்படுத்துகிறது என எழுதுகிறார். தேவனை, அவருடைய வார்த்தையால் ஏற்றுக்கொண்டு, அவரைக் குறித்தும், நம்மைக் குறித்தும் கூறப்பட்டுள்ள அவருடைய வார்த்தைகளை நாம் நம்பும் போது, அவருடைய இருதயம் நமக்கு நேராகத் திருப்பப்படுவதைக் காண்கிறோம். நாம் அவருடைய உண்மையான வார்த்தைகளைச் சார்ந்து இருக்கும்போது அவர் உண்மையுள்ளவர் என்பதை நமக்கு வெளிப்படுத்த அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கிறோம். வேதாகமம் அவருடைய வாக்குத்தத்தங்களால் நிறைந்துள்ளதால் நன்றியோடிருப்போம். நினைப்போம், “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (புல. 3:22-23).