பழைய ஏற்பாட்டின் முடிவில் தேவன் தன்னை மறைத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. நான்கு நூற்றாண்டுகளாய் யூதர்கள் ஆச்சரியத்தோடு காத்திருந்தனர். தேவனோ அவர்கள் ஜெபத்தைக் கேளாதவராய், கரிசனையற்றவராய், செயல்படாதவராய் இருப்பதுபோலத் தோன்றியது. மேசியா வருவாரென்ற ஒரே ஒரு பண்டைய வாக்குத்தத்தம் மட்டுமே நம்பிக்கையளித்தது. அந்த வாக்குக்குத்தத்தத்தின் மேலேயே யூதர்கள் அக்கரை வைத்திருந்தனர். திடீரென்று ஆச்சரியமானதொன்று நடந்தது, ஒரு பாலகன் பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
அந்த செய்தியைக் கேட்டவர்களின் உற்சாகத்தை லூக்காவில் வாசிக்கிறோம். இயேசுவின் பிறப்பைச் சுற்றி நிகழ்ந்தவையெல்லாம் ஒரு சந்தோஷத்தால் நிறைந்த இசை நிகழ்ச்சி போலிருக்கிறது. பலவித கதாபாத்திரங்கள் மேடையில் தோன்றுகின்றனர். ஒரு வயதான வெள்ளைத்தலை மாமா (லூக். 1:5-25), பிரமிப்படைந்த ஒரு கன்னிகை (லூக். 1:26-38), வயதான தீர்க்கதரிசி அன்னாள் (2:36), மரியாள் பாடிய அருமையான கீதம் (லூக். 1:46-55), தாயின் வயிற்றிற்குள்ளிருந்து துள்ளின இயேசுவின் உறவுப் பாலகன் (லூக். 1:41).
லூக்கா கவனமாக மேசியாவைப்பற்றிய பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களோடு நேரடித் தொடர்பு ஏற்படுத்துகிறார். காபிரியேல் தூதன் யோவான் ஸ்நானனை கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ண அனுப்பப்பட்ட எலியா என்றான் (லூக். 1:17). நிச்சயமாகவே ஏதோ ஒன்று பூமி என்னும் கிரகத்தில் உருவாகிக்கொண்டிருந்தது. ரோமப் பேரரசில் அவர்களாய் தோற்கடிக்கப்பட்ட யூதேயாவின் இருண்ட மூலையிலிருந்த கிராமவாசிகளிடமிருந்து எதோ ஒரு நன்மையான காரியம் வெடித்து வெளிப்பட்டது.
ஒரு காலத்தில், நம் உலகத்திலிருந்த மாட்டுத்தொழுவத்தில் நம் உலகத்தைவிட மாபெரும் காரியம் ஒன்று தோன்றியது. சி.எஸ். லூயிஸ்