நாங்கள் ஒரு பையனை வெளிநாட்டிலிருந்து தத்தெடுத்து கடல் கடந்து எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபொழுது. அவனிடத்தில் அளவு கடந்த அன்பை பொழிந்து, கடந்த காலத்தில் அவன் அனுபவித்திராத விதவிதமான உணவுகளையும், அவனுக்குக் கொடுத்தோம். உணவு பற்றாக்குறையினால் அவனுக்கு ஒரு குறையிருந்தது. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களிடம் காட்டியும் அவன் வளர்ச்சியடையவில்லை. மூன்று வருடங்களுக்குப்பின் அவனுக்கு சில உணவுகள் ஒவ்வாமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட உணவுகளை விலக்கியவுடன், சில மாதங்களுக்குள் அவன் ஐந்து அங்குலம் வளர்ந்துவிட்டான். அவன் வளர்ச்சியை தடைசெய்த உணவுகளைத் தெரியாமல் கொடுத்ததற்காக வருந்தினாலும், அவனுடைய வளர்ச்சியினால் சந்தோஷப்பட்டோம்.

அநேக ஆண்டுகளாக ஆலயத்தில் காணாமற்போயிருந்த நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தவுடன் யோசியா ராஜாவும் என்னைப்போலவே சந்தோஷப்பட்டிருப்பான்; என்று நினைக்கிறேன். நான் அறியாமலேயே என் மகனின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் வேதனையுற்றது போல யோசியாவும், தன் அறியாமையினால், தேவன் தன் மக்களுக்காகக் கொண்ட மிகச்சிறந்ததும், பூரணமானதுமான விருப்பங்களை இழந்ததற்காக மனம் வருந்தினான் (2 இரா. 22:11). தேவனுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ததற்காக அவன் புகழப்பட்டாலும் (வச. 2), நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தபின் தேவனை எப்படி இன்னும் அதிகமாக கனம் பண்ணவேண்டுமென்று அறிந்துகொண்டான். இப்பொழுது புதிதாகப் பெற்ற அறிவினால் தேவன் கற்பித்தபடியே தேவனை ஆராதிக்க ஜனங்களை வழிநடத்தினான் (23:22-23).

வேதத்திலிருந்து தேவனை எவ்வாறு கனம் பண்ணவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் நாம் அவ்வாறே தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமற் போனதற்காக வருத்தப்படுவோம். ஆனாலும் அவர் நம்மை குணப்படுத்தி, திரும்ப உயிர்ப்பித்து, இன்னும் ஆழமாக அவரை அறிகிற அறிவிற்குள் நடத்துகிறபடியால் ஆறுதல் அடைய முடியும்.