நான் அடிக்கடி வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் செய்த வருடங்களில், ஒவ்வொரு நாளும் ஹோட்டலில் தங்குவதற்கு செல்லும் பொழுது, அங்குள்ள பணியாளர்களிடம் காலை விழித்து எழும்புவதற்காக தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுக்கொள்ளுவேன். என்னுடைய கடிகாரத்தில் அலாரம் வைத்திருந்தாலும் சத்தமாக ஒலிக்கும் டெலிபோன் மணி அடித்தால்தான் நான் என் படுக்கையிலிருந்து விழித்தெழும்பி என்காலை வேலைகளை கவனிக்க இயலும்.

வெளிப்படுத்தல் புத்தகத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதின பொழுது, ஆவிக்கேற்ற எழுப்புதற்கான அழைப்பைப் பற்றி எழுதியுள்ளார். சர்தை சபைக்கு இயேசுவினிடத்திலிருந்து வந்த செய்தியை எழுதின பொழுது “ உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன். நீ உயிருள்ளவென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாய் இருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு சாகிறதிற்கேதுவாக இருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை” (வெளி 3:1-2) என்று எழுதினார். ஆவியிலே சோர்வடையும் பொழுது நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவில் ஒரு மந்த நிலை மெதுவாக ஏற்படுவதை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம். ஆனால், கர்த்தர் “நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து அதைக் கைக் கொண்டு மனந்திரும்பு (வச. 3) என்று நினைவு கூறச் செய்கிறார்.

ஒவ்வொரு நாள் காலையும் வேதம் வாசித்து ஜெபிக்க சிறிது நேரத்தை ஒழுங்காக ஒதுக்கி வருவது ஆவிக்கேற்ற வாழ்க்கையில் நாம் விழிப்புடன் இருக்க உதவுகிறது. இயேசுவோடு நேரம் செலவழிப்பது ஒரு வேலையல்ல. ஆனால், அந்த நாளில் நமக்கு முன்னாலுள்ள காரியங்களுக்கு நம்மை தேவன் தாமே ஆயத்தப்படுத்துவதற்கான மகிழ்ச்சியான நேரம் அது.