நவம்பர் 2015ல் எனக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவையென அறிந்தேன். நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், அசைக்கப்பட்டேன். நான் மரணத்தைக்குறித்து சிந்திக்கலானேன். நான் சரிசெய்யவேண்டிய உறவுகளுண்டா? என் குடும்பத்திற்காக நான் ஏற்பாடு பண்ண வேண்டிய பணவிஷயங்கள் உண்டா? அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், நான் வேவை செய்வதற்கு பலமாதங்களாகலாம். சிகிச்சைக்கு முன்னரே முடிக்கக்கூடிய வேலைகளுண்டா? காத்திருக்க முடியாத சில வேலைகளுண்டு. அவற்றை தான் யாரிடம் ஒப்படைப்பது? அது ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டிய தருணம்.

ஆனால், இரண்டையும் என்னால் செய்ய முடியவில்லை!

என் சரீரம் பலவீனமாயிற்று; என் மனது சோர்ந்து போனது. மிகவும் எளிய வேலைகள் கூட என் பலத்திற்கு மிஞ்சினவைகளாய்த் தோன்றியது. மிகவும் ஆச்சரியமானதென்னவென்றால், நான் ஜெபிக்க முயன்றவுடனே என் எண்ணங்கள் என் நோய்க்கு நேராகவும், அதனால் ஏற்பட்ட இன்னல்களுக்கு நேராகவும் திரும்பும். ஏன் இருதயம் என்னைத் துங்கச் செய்துவிடும். அது அதிக மனமடிவை ஏற்படுத்தியது. என்னால் வேலையும் செய்ய முடியவில்லை, மனைவி பிள்ளைகளோடு கூடக் கொஞ்ச நாட்கள் இருக்க தேவனிடம் கேட்கவும் முடியவில்லை!

ஜெபிக்க முடியாமலிருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அறிந்த தேவன் நான் ஜெபிக்க முடியாமலிருந்ததையும் அறிந்து அதை மேற்கொள்ள இரண்டு ஆயத்தங்களைச் செய்தார். நாம் ஜெபிக்க முடியாதபோது பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபிப்பது (ரோ. 8:26) நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது (யாக். 5:16, கலா. 6:2).

பரிசுத்த ஆவியானவர் பிதாவிடம் என் பெலவீனத்தைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்காக ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேட்பது எத்தனை பெரிய ஈவு! அவர்கள் என்னிடம் என்னத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டதற்கு நான் கொடுத்த பதிலையும் தேவன் கேட்டார் என்பது எத்தனை ஆச்சரியம்.

நமக்கொரு நிச்சயமில்லாத நேரத்தில் நான் ஜெபம் பண்ணமுடியாவிட்டாலும் என் இருதயத்தின் ஏக்கங்களைத் தேவன் கேட்கிறார் என்பது எத்தகைய பரிசு!