நான் எனது அறையின் திறந்த ஜன்னல் வழியாகப் பார்த்த போது, பறவைகள் கீச்சிடுவதைக் கேட்கவும், மெல்லிய தென்றல் மரங்களின் மீது வீசுவதைக் கேட்கவும், காணவும் முடிந்தது. என் அருகில் வசிப்பவர் புதியதாக உழுதிருந்த வயல்வெளியில், வைக்கோல் கட்டுகள், புள்ளிகளாகக் காட்சியளித்தன. மின்னும் நீல வானத்தில் பெரிய வெண்ணிற மேகக்கூட்டம் தனித்து நின்றது.
எங்களுடைய நிலங்களை வேகமாகக் கடந்து செல்கின்ற வாகனங்களின் தொடர் ஓசையையும் எனது முதுகு பகுதியில் ஏற்பட்ட சிறிய வலியையும் தவிர நான் கொஞ்சம் பரலோகத்தை அனுபவித்தேன். நாம் வாழும் இப்பூமி முன்னொரு காலத்தில் முற்றிலும் நலமானதாக இருந்தது. ஆனால், இப்பொழுது இல்லை. எனவே நான் பரலோகம் என்ற வார்த்தையை சிறிதளவே பயன்படுத்த முடிகிறது. மனித குலம் பாவத்திற்குள்ளான போது ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. பூமி சாபத்திற்குள்ளானது (ஆதி. 3). அதிலிருந்து பூமியும் அதிலுள்ளவைகளும் அழிவுக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்டன. வேதனைகள், நோய்கள், இறப்புக்கள் யாவும் பாவத்தில் வீழ்ந்ததின் விளைவுகளே (ரோம. 8:18-23).
ஆனாலும், தேவன் சகலத்தையும் புதிதாக்குகின்றார். ஒருநாள் அவர் வாழுமிடம் அவருடைய பிள்ளைகளோடும், புதிதாக்கப்பட்ட, மீட்டெடுக்கப்பட்ட படைப்புகளோடும், புதிய வானத்திலும் புதிய பூமியிலுமிருக்கும். அங்கே மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, ஏனெனில் முந்தினவைகள் ஒழிந்து போயின (வெளி. 21:1-4). அந்த நாள் வரும் வரை, நாம் பிரகாசமான ஒளியையோ, சில வேளைகளில் விரிந்து நம்மைக் கவரும் அழகினையோ இவ்வுலகில் நாம் காணும் போது, நாம் அனுபவிக்கப்போகின்ற பரலோகத்தின் ஒரு சிறிய முன் அனுபவமாகக் அதைக் கருதுவோம்.
தேவன் சகலத்தையும் புதிதாக்குகின்றார்.