இராணுவத்தில் திறம்பட பணியாற்றிய ஒரு முதியவரின் அடக்க ஆராதனையில் பிரசங்கித்த போதகர், மரித்தவர் எங்கிருப்பார் என்ற கேள்வியை எழுப்பினார். பின்னர் எப்படி மனிதர்கள் கடவுளை அறியலாமென கூறாமல் வேதாகமத்தில் எங்கும் எழுதப்படாத காரியங்களைக் குறித்து யூகங்களை அறிவித்தார். நம்பிக்கை எங்கே போனது என நான் சிந்திக்கலானேன்.
இறுதியாக முடிவுப் பாடலை பாடும்படி அவர் கூறினார். “ தேவனே நீர் எவ்வளவு பெரியவர்” என்ற பாடலைப் பாட நாங்கள் எழுந்தபோது, தேவனை கூடியிருந்த யாவரும் தங்கள் உள்ளத்திலிருந்து துதிக்க ஆரம்பித்தனர். சில நொடிகளுக்குள், எங்களது அறையின் ஆவிக்குரிய நிலை முற்றிலும் மாறியது. திடீரென ஆச்சரியப்படும் வண்ணம், மூன்றாவது சரணத்தை நான் பாடுகையில் உணர்ச்சிகள் எனது குரலை முற்றிலும் அடக்கிற்று!
தேவன் தமது குமாரனை மறைத்துவைக்காமல்
மரிக்க அனுப்பியதை நான் எண்ணி துதிக்கிறேன்
சிலுவையில் என் பாவத்தை மகிழ்வுடன் சுமந்தார்
இரத்தம் சிந்தி என் பாவத்திற்காய் அவர் மரித்தார். (How great Thou art)
அந்தப் பாடலைப் பாடி முடிக்கும் வரையிலும் தேவன் அந்த அடக்க ஆராதனைக்கு வருவாரா, மாட்டாரா என்று சிந்தித்தேன். அவர் ஒருபோதும் விலகிச் செல்லார். எஸ்தர் புத்தகம் இவ்வுண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்நிய நாட்டில் வசித்த யூதர்களை பலம் பொருந்திய மக்கள் அழிக்க முயன்றனர். அந்த மிக இருளான வேளையிலும் அடிமைகளாய் வாழ்ந்த இஸ்ரவேலர் தங்களது உரிமையைக் காத்துக்கொள்ள ஒரு தேவனை அறியாத ராஜா அவர்களுக்கு உதவி செய்தான் (எஸ். 8:11-13). வெற்றிகரமாக இஸ்ரவேலர் தங்களைக் காத்துக் கொண்டனர். கொண்டாட்டம் தொடங்கியது (9:17-19).
அடக்க ஆராதனையில் பாடப்பட்ட ஒரு பாடலில் தேவன் வெளிப்பட்டார் என்பது வியப்பான ஒரு காரியமல்ல. ஆண்டவர் ஒரு மனுக்குல அழிவை கொண்டாட்டமாக மாற்றினார், சிலுவையிலறையப்படுவதை உயிர்த்தெழுதலாகவும் இரட்சிப்பாகவும் மாற்றினார்!
நமது ஆச்சரியமான தேவன் நாம் சற்றும் எதிர்பாராத வேளையில் வெளிப்படுவார்!