எனக்கு ஆறு வயதிருக்கும்போது எனது அண்ணன்களோடு சேர்ந்து ரோல்லர் கோஸ்டர் எனப்படும் அதி விரைவு ராட்டினத்தில் சவாரி செய்தேன். மிக வேகமாக ஒரு வளைவில் அது திரும்பியபோது “இதை உடனே நிறுத்துங்கள்! நான் கீழே இறங்க விரும்புகிறேன்” என அலற ஆரம்பித்தேன். அந்த ராட்டினம் நிற்கவில்லை. அது நிற்கும்வரை மிக இறுக்கமாக கையைப் பிடித்தவாறு நான் உட்கார வேண்டியதாயிற்று.
கொண்டை ஊசி வளைவுகளும் கீழ்நோக்கிய திடீர் இறக்கங்களும் கொண்ட, விரும்பப்படாத ரோலர் கோஸ்டர் சவாரியைப்போல நாம் சில சமயங்களில் நமது வாழ்வில் உணரலாம். எதிர்பாராத நெருக்கடிகள் நேரிடும்போது, நமது நம்பிக்கையைத் தேவனில் வைப்பதுதான் நமது சிறந்த துணையாதாரம் என வேதாகமம் நமக்கு நினைவூட்டுகிறது. அந்நியர் படையெடுப்பினால் தனது நாட்டுக்கு பயமுறுத்தல் இருந்த போராட்டமான காலத்தில், ஆவியானவரால் ஏவப்பட்ட ஏசாயா தீர்க்கதரிசி தேவன் அளித்த இந்த வல்லமைமிக்க வாக்குத்தத்தத்தை உணர்ந்து கொண்டார். “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசா. 26:3).
அவர் பக்கம் நாம் திரும்பும்போது, நமது இரட்சகர் அளிக்கும் சமாதானம் “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்” (பிலி. 4:7) ஆகும். மார்பகப் புற்றுநோயில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் வார்த்தைகளை நான் எப்போதும் நினைப்பேன். ஒரு நாள் சாயங்காலம் எங்களது சபையைச் சார்ந்த ஒரு குழுவினர் அவளுக்காக ஜெபித்து முடித்த பிறகு அவள் சொன்னாள், “என்ன நடக்குமென்பது எனக்குத் தெரியாது, ஆனால், நான் நன்றாக இருப்பேன் என்று எனக்கு தெரியும். ஏனெனில் இன்றிரவு தேவன் நம்மோடு இருக்கிறார்.” வாழ்க்கையில் பல கஷ்டங்கள் உண்டு ஆனாலும் வாழ்வைக் காட்டிலும் அதிகமாக நம்மை நேசிக்கும் ஆண்டவர் நமது கஷ்டங்களைவிடப் பெரியவர்.
இயேசுவானவரே நமது சமாதானம்.