மகிழ்ச்சியான இருதயம்
எனது பேத்திக்கு ஜான் பிலிப் சௌசா அணிவகுப்பு ராகங்களில் ஒன்று மிகவும் பிடிக்கும். சௌசா அமெரிக்க ஐக்கிய நாட்டில் 19ம் நூற்றாண்டின் பின் பகுதியில் வாழ்ந்த இசை அமைப்பாளர், அணிவகுப்புப் பாடல்களை இயற்றுவதில் மன்னன் என்று கருதப்பட்டார். எனது பேத்தி மோரியா எந்த ஒரு அணிவகுப்பிலும் இல்லை. அவள் 20 மாதக் குழந்தைதான்; அவளுக்கு அந்த ராகம் மிகவும் பிடிக்கும். அதிலுள்ள சில வரிகளின் ராகத்தைப் போன்று வாயினால் ஓசையும் எழுப்புவாள். அந்த ராகத்தை மகிழ்ச்சியான நேரங்களோடு அவள் சம்பந்தப்படுத்தி சிந்திப்பாள். நாங்கள் குடும்பமாகக் கூடி வரும்பொழுது அனேக சத்தங்களின் ஊடாக, கரங்களைத் தட்டி, இந்தப் பாடலை வாய் திறவாமல் பாடுவோம். எங்களது ஓசைக்கு தகுந்தவாறு பேரக் குழந்தைகள் வட்டமாக நின்று நடனமாடுவார்கள். அது எப்பொழுதுமே மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கும், குழந்தைகளின் சிரிப்பொலியுடன் முடிவு பெறும்.
இந்த மகிழ்ச்சியின் சத்தம் “கர்த்தரை மகிழ்ச்சியுடன் ஆராதனை செய்யுங்கள்” சங்கீதம் 100:2 என்ற சங்கீதத்தை நினைவுகூர என்னை வலியுறுத்துகிறது. சாலொமோன் ராஜா தேவாலயத்தை பிரதிஷ்டை செய்தபொழுது இஸ்ரவேல் மக்கள் துதியுடன் ஆராதனை செய்தார்கள் (2 நாளா. 7:5,6). அவர்கள் பாடிய பாட்டுகளில் சங்கீதம் 100ம் ஒன்றாக இருந்திருக்கலாம்: “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்; மகிழ்ச்சியுடன் கர்த்தருக்கு ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதி முன் வாருங்கள். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்” (சங். 100:1,3,4) என்று அந்த சங்கீதம் அறிவிக்கிறது. “கர்த்தர் நல்லவர். அவருடைய கிருபை என்றென்றைக்கும் உள்ளது” (வச. 5).
நமது தேவன் நம்மை நேசிக்கிறார். அதற்கு மாறுத்தரமாக நாமும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடுவோம் (சங். 100:1).
ஒய்வெடுக்க ஒருநாள்
ஒரு ஞாயிற்றுக்கிழமை வடக்கு லண்டன் பகுதியின் வழியாக சல, சல வென்று ஓசையோடு ஓடிக்கொண்டிருந்த ஓர் ஓடையின் அருகில் நான் நின்று கொண்டு, கட்டடங்களால் நிறைந்திருந்த எங்கள் பகுதிக்கு அந்த ஓடை எவ்வளவு அழகைக் கொண்டு வருகிறது என்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தேன். அலை, அலையாய் விழும் அந்த ஓடை நீரை பார்த்தபொழுதும், பறவைகள் பாடல்களைக் கேட்ட பொழுதும் எனது சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றேன். நமது ஆத்துமாக்களுக்கு ஓய்வு கொடுக்க இப்படியாக நமக்கு உதவி செய்யும் தேவனுக்கு நான் நன்றி கூறினேன்.
ஆதிகாலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து வந்த அவருடைய ஜனங்களுக்கு ஓய்வு கொடுக்கவும், அதன்மூலம் அவர்கள் புது பெலன் அடையவும், ஓய்வு நாளை ஆசரிக்கும்படி தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஏனெனில், அவர்கள் செழிப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். யாத்திராகமத்தில் நாம் பார்ப்பதுபோல், அவர்களது வயல் வெளிகளில் ஆறு ஆண்டுகள் பயிரிடவும், ஏழாம் ஆண்டு ஓய்வு கொடுக்க வேண்டுமென்றும் கூறினார். அதுபோலவே ஜனங்கள் ஆறு நாட்கள் வேலை செய்யவும், ஏழாம் நாள் ஓய்ந்திருக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டார். இந்த விதமாக தேவன் கட்டளையிட்ட வாழ்க்கை முறையினால் இஸ்ரவேல் மக்கள் மற்ற தேச மக்களிலிருந்து பிரித்து வைக்கப்பட்டார்கள். அவரது சொந்த ஜனங்கள் மட்டுமல்லாது, அவர்களது மத்தியில் வசிக்கும் அந்நியரும், அடிமைகளும்கூட அதே வாழ்க்கை முறையைக் கையாள அனுமதிக்கப்பட்டார்கள்.
நமது ஓய்வு நாளை எதிர்பார்ப்போடும், செயல் திறமையோடும், நமது ஆத்துமாக்களை போஷிக்கத்தக்கதான காரியங்களைச் செய்து தேவனை ஆராதிப்பதற்கு நமக்கு கிடைக்கக் கூடிய தருணங்களை பயன்படுத்த ஆயத்தமாக இருப்போம். இவைகள் நமது விருப்பத்தைப் பொறுத்தது. சிலர் விளையாட விரும்புவார்கள். சிலர் தோட்ட வேலைகள் செய்ய விரும்புவார்கள். சிலர் அவர்களது சினேகிதரோடும், குடும்பத்தாரோடும் சேர்ந்து உணவு உண்டு மகிழ விரும்புவார்கள்.
நமது வாழ்க்கையில் அப்படிப்பட்ட தருணங்கள் இல்லாதிருந்தால், ஓய்வெடுப்பதற்காக ஒர் நாளை ஒதுக்குவதினால் கிடைக்கக்கூடிய சிறப்பையும், மகிழ்ச்சியையும் நாம் எவ்வாறு மறுபடியும் பெற்று கொள்ள இயலும்?
தலை சிறந்த மேன்மை
நான் ஜமைக்காவில் வளர்ந்த பொழுது என் பெற்றோர் என்னையும், என் சகோதரியையும் “நன் மக்களாக” இருக்கத்தக்கதாக எங்களை வளர்த்தார்கள். பெற்றோருக்கு கீழ்ப்படிதல், உண்மையைச் சொல்லுதல், பள்ளியிலும் மற்ற வேலைகளிலும் தலை சிறந்துவிளங்குதல். கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர்காவது ஆலயத்திற்குச் செல்லுதல், இவைகளே நல்லவர்கள் என்பதின் அடையாளமாக எனது வீட்டில் இருந்தது. நான் மேலே கூறிய விளக்கமே எல்லா நாட்டிலும் நல்லவர்கள் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்குமென்று நான் கற்பனை செய்கிறேன். உண்மையில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தில் நல்லவர் என்ற பதத்திற்கு கொடுத்துள்ள விளக்கமானது, அதைவிட மேலான ஒரு காரியத்தை குறிப்பதாக இருக்கிறது .
பவுல் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தியுள்ள யூதனாக நியாயப்பிரமாண விதிகளை ஒழுங்காக கைக்கொண்டு வந்தார். அவர் மிகச் சிறந்த குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த கல்வியை கற்று, சிறந்த மதத்தை கைக் கொண்டு வந்தார். யூத பழக்க வழக்கங்களை கைக் கொண்டு நடப்பதில் பவுல் உண்மையாகவே நல்ல மனிதனாக விளங்கினார். அவர் விரும்பினால், அவருடைய மேன்மையான குணங்களைப்பற்றி அவர் மேன்மை பாராட்டலாம் என்று வசனம் 4இல் கூறுகிறார். அவர் மிக நல்லவர்தான் ஆயினும் நல்லவராக இருப்பதைவிட மேலான ஒரு காரியம் உள்ளதென்று, அவருடைய நிருபத்தை வாசிப்பவர்களுக்கு (நமக்கும்) கூறியுள்ளார். நல்லவராக கருப்பதும் தேவனுக்குப் பிரியமாக வாழ்வதும் ஒரே காரியம் அல்ல என்பதை பவுல் அறிந்திருந்தார்.
இயேசுவை பிரியப்படுத்துவது என்பது, இயேசுவை அறிந்து கொள்வதுதான் என்று வசனம் 7,8ல் பவுல் எழுதியுள்ளார். இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும், இயேசு கிறிஸ்துவின் மேன்மைகளைய ஒப்பிடும் பொழுது, அவருடைய மேன்மைகள் எல்லாம் குப்பை என்று கருதினார். நாம், நமது மேன்மையை நம்பாமல், நமது நம்பிக்கையும், விசுவாசமும் கிறிஸ்துவில் மட்டுமே இருக்கும் பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோம், தேவனை பிரியப்படுத்துகிறோம்.
முதன்மையாகச் செயல்படுதல்
எங்களது மகன், அவனது குழந்தைபருவத்தில் ஓர் அனாதை இல்லத்தில் வளர்ந்ததால் ஏற்பட்ட பேரதிர்ச்சியினால், மனம் நிலைகுலைந்து காணப்பட்டான். அதனால் அவன் எதையும் எதிர் மறையாக சிந்திக்கவும், செயல்படவும் செய்தான். ஆகவே, அவன் எங்கள் குடும்பத்தோடு இணைந்து ஒத்துப்போக, அவனை பழக்கப்படுத்துவதற்காகவும், அவனது மனநிலை சரியாவதற்கும் நாங்கள் பொறுமையோடு அவனுக்கு உதவி செய்தோம். அவனது குழந்தை பருவத்தில், அவன் கடந்து வந்த கடினமான வாழ்க்கையைக் குறித்து, நான் மிகவும் கரிசனைப்பட்டாலும், அவனது எதிர்மறை நடவடிக்கை காரணமாக, உணர்வளவில் நான் அவனை விட்டு தூரமாக விலக ஆரம்பித்தேன். மன நோய் சிகிச்சை அளிப்பவரிடம் என் மனப் போராட்டத்தைப் பகிர்ந்து கொண்டேன். “நீங்கள் முதலாவது அன்பைக் காட்டுவது அவனுக்கு தேவையாக உள்ளது. அவன் நேசிக்கப்படத் தகுதியானவன் என்று நீங்கள் அவனுக்கு காண்பித்தால், அவனும் அதற்கு ஏற்றபடி தகுதியாக நடந்து கொள்வான்” என்ற அவரது அன்பான ஆலோசனை என் மனதில் ஆழமாக பதிந்தது.
தேவனுடைய அன்பே ஒருவர் மேல் ஒருவர் அன்புகூருவதற்கு வழி நடத்துகிற மூல ஆதாரமாகவும், காரணமாகவும் உள்ளதென்று அப்போஸ்தலனாகிய யோவான் அவரது நிருபத்தை வாசிக்கும் மக்கள் ஒருவரோடொருவர் ஆழமாக அன்புகூரத்தக்கதாக வழிநடத்துகிறார் (1 யோவா. 4:7,11). எனது சினேகிதர்களோ, எனது சொந்த பிள்ளைகளோ அல்லது எனக்கு அறிமுகமாகாதவர்களோ, யாராக இருந்தாலும், அப்படிப்பட்ட உண்மையான அன்பை அவர்கள்மீது காண்பிக்கவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆயினும், யோவானுடைய வார்த்தைகள் பிறரை உண்மையோடு நேசிக்க வேண்டுமென்ற ஆவலை எனக்குள் தூண்டி எழுப்புகிறது. தேவன் முதலாவது நம்மில் அன்பு கூர்ந்தார். தேவன் அவருடைய பரிபூரண அன்பை நம் ஒவ்வொருவர் மேலும் செயல்படுத்தி காண்பிக்க, அவரது ஒரே பேரான குமாரனை அனுப்பினார். நாம் செய்வதுபோல அவர் அவரது இருதயத்தை நம்மை விட்டு விலக்கிக்கொள்ளாததை எண்ணி நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்.
நமது பாவச் செயல்கள் தேவனுடைய அன்பு நம்மீது வெளிப்பட தடையாக இருந்தாலும், அவர் அவரது அன்பை நம்மீது பொழிவதில் தயக்கம் காட்டாமல் மன உறுதியுடன் இருக்கிறார் (ரோம. 5:8). அவர் முதலாவது நம்மை நேசித்ததால், அந்த அன்பின் பிரதிபலிப்பாக நாமும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்று அவருடைய அன்பு வலியுறுத்துகிறது.