உலகளாவிய பஞ்சம் தலைவிரித்தாடிய காலங்களில், 1933ஆம் ஆண்டு எனது பெற்றோருக்கு திருமணம் நடந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட நம்ப முடியாத ஜனத்தொகை பெருக்கத்தில் ஏராளமான குழந்தைகள் பிறந்தன. அக்காலத்தில்தான் நானும் என் சகோதரியும் பிறந்தோம். இளைய தலைமுறையைச் சார்ந்த 1970-1980களில் எங்களது நான்கு பெண்களும் பிறந்தார்கள். அப்படிப்பட்ட வேறுபட்ட காலங்களில் வளர்ந்த எங்களுக்கு அநேகக் காரியங்களைக் குறித்து வேறுபட்ட கருத்துக்களை, நாங்களும் எங்கள் பிள்ளைகளும் கொண்டிருந்தோம் என்பதில் ஆச்சரியமில்லை.

பல்வேறு தலைமுறைகளில் வாழும் மக்கள், அவர்களது அனுபவங்களிலும், வாழ்க்கை மதிப்புகளிலும் மிக அதிக வேறுபட்ட எண்ணங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். இது இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் உண்மையாக இருக்கிறது. நாம் உடுத்தியிருக்கும் உடையில், நாம் கேட்டு மகிழும் பாடல்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்மிடையே உள்ள ஆவிக்கேற்ற தொடர்பு அந்த வேறுபாடுகளைவிட பலமானது.

தேவனைத் துதித்துப்பாடும் சிறந்த பாடலான சங்கீதம் 145, நமது விசுவாசத்தின் பற்றுதியை அறிவிக்கிறது. “தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்… அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியை கெம்பீரித்துப் பாடுவார்கள்” (வச. 4,7). பல்வேறு கால வேறுபாடுகளும் அதனால் ஏற்பட்ட அனுபவங்கள் நமக்கு இருந்தாலும், நாம் ஒன்று கூடி “மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப் பிரதாபத்தையும் தெரிவித்து” தேவனை கனப்படுத்துகிறோம் (வச. 11).

விருப்புகளும், வெறுப்புகளும் நம்மைப் பிரிக்கக் கூடியவைகளாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம், ஒருவர் பேரில் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை ஊக்கம், ஒருவரையொருவர் போற்றுவது ஆகிய இவைகள் நம்மை ஒன்றாக இனைக்கிறது. நமது வயதும், வாழ்க்கையைக் குறித்த கண்ணோட்டமும் வேறுபட்டிருந்தாலும், நாம் சிறந்த வாழ்க்கை வாழ ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம். நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு அனைவரும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தலாம். “உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்து பேசுவார்கள்” (வச. 12).