எனது சினேகிதன் நார்ம் குக் வேலை முடிந்து வீடு திரும்பும்பொழுது, சில சமயங்களில் அவனது குடும்பத்தாருக்கு எதிர்பாராத ஆச்சரியத்தைக் கொடுப்பான். அவன் முன் வாசல் வழியாக நுழையும் பொழுது “நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டீர்கள்” என்று உரத்தக்குரலில் சொல்லுவான். அவனது குடும்பத்தார் அவனுக்கு ஏதோ தீங்கு விளைவித்து, அதற்கான மன்னிப்பை அவனிடம் பெற வேண்டும் என்று அர்த்தமில்லை. அந்த நாள் முழுவதும் அவர்களை அறியாமலேயே அநேகப் பாவங்கள் செய்திருந்தாலும், தேவனுடைய கிருபையால் முற்றிலும் மன்னிக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர்களுக்கு அவன் ஞாபகப்படுத்தினான். “அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:7-9) என்று தேவனின் கிருபையைப் பற்றி யோவான் இந்த வசனங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஒளியில் நடப்பது என்பது இயேசுவைப் பின்பற்றுவதின் உருவகமாகும். தேவனுடைய ஆவியானவரால் இயேசுவைப்போல நடப்பது நாம் அப்போஸ்தலரோடு விசுவாசத்தின் ஐக்கியத்தில் இணைந்துவிட்டோம் என்பதற்கு அடையாளம் என்று யோவான் குறிப்பிட்டுக் கூறுகிறார். நாம் உண்மையான கிறிஸ்தவர்கள்தாம்; ஆனால் சில நேரங்களில் நாம் தவறானவற்றைத் தேர்ந்தெடுத்துவிடுவோம். ஆகவே நாம் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்றும் கூறுகிறார். ஆயினும் தேவ கிருபை நமக்கு அளவில்லாமல் அருளப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மன்னிப்பைப் பெறலாம்.

நாம் பாவமில்லாத பரிபூரணமானவர்கள் அல்ல ஆனால், இயேசுவால் மன்னிக்கப்பட்டவர்கள். அதுவே இன்றைக்குரிய நற்செய்தியாகும்.