முதியோருக்கான ஒரு சிறிய மருத்துவமனையிலிருந்த வயது சென்ற அந்தப் பெண், யாருடனும் பேசுவதுமில்லை, தனக்குக் தேவையான எதையும் கேட்டதுமில்லை. ‘கிரீச்’ என்று ஒலி எழுப்பக்கூடிய அவளது பழமையான அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்து ஆடிக் கொண்டே தன் நேரத்தை கழிப்பாள். அவளைப் பார்க்க அதிக பார்வையாளர்களும் வர மாட்டார்கள். ஆகவே ஒரு இளம் தாதிப் பெண், அவளுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்திலெல்லாம் அந்தப் பெண்ணின் அறைக்குச் செல்வாள். அந்த வயது சென்ற பெண்ணிடம் கேள்விகள் கேட்டு அவளை பேச வைக்கவேண்டும் என்று முயற்சிக்காமல், அவளும் ஒரு அசைந்தாடும் நாற்காலியை அவள் அருகில் இழுத்துப்போட்டு, அந்தப் பெண்ணோடு இணைந்து ஆடுவாள். அநேக மாதங்களுக்குப் பின் அந்த வயதானப் பெண் “என்னோடுகூட சேர்ந்து நீ அசைந்தாடுவதற்கு நன்றி” என்று கூறினாள். அந்த இளம் தாதிப் பெண் அவளோடு கூட அமைதியாக நேரத்தைச் செலவிட்டு நட்புறவை பகிர்ந்து கொண்டதற்கு அவள் நன்றியோடிருந்தாள்.

இயேசு பரலோகத்திற்கு போகும்முன்பு அவருடைய சீஷர்களோடு என்றென்றும் இருக்கத்தக்கதாக ஒரு தேற்றரவாளனை அவர்களுக்கு அனுப்புவதாக அவர் வாக்குப்பண்ணினார். அவர் அவர்களை திக்கற்றோர்களாக விடப் போவதில்லை என்றும் அவர்களுக்குள்ளே என்றென்றும் வாசம் பண்ணத்தக்கதாக பரிசுத்த ஆவியை அனுப்பப்போவதாக வாக்குப் பண்ணினார் (யோவா. 14:17). இயேசுவை விசுவாசிக்கும் இன்றைய விசுவாசிகளுக்கும் அந்த வாக்குத்தத்தம் உண்மையாகவே உள்ளது. திரியேக தேவனாகிய அவர் நம்மில் வாசம் பண்ணுவதாக இயேசு கூறினார் (வச. 23).

நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு நெருக்கமான, உண்மையான, தோழராக கர்த்தர் இருக்கிறார். நமது போராட்டங்களில் அவர் நம்மை வழி நடத்தி நமது பாவங்களை மன்னித்து, நமது அமைதியான ஜெபங்களைக் கேட்டு நம்மால் சுமக்க இயலாத பாரங்களை அவரது தோள்களில் சுமப்பார்.

இன்று நாம் அவரது இனிய தோழமையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.