சமீபகாலத்தில் நான் விமானப் பயணத்தை மேற்கொண்டபொழுது நான் இருந்த வரிசைக்கு சில வரிசைகளுக்கு முன்பாக, குழந்தைகளுடன் அமர்ந்திருந்த ஒரு தாயாரைப் பார்த்தேன். தளிர் நடை நடக்கும் சிறுவன் மன திருப்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தாயோ அண்மையில் பிறந்த அவளது குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து, அதன் கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை ஆச்சரியம் நிறைந்த கண்களால் தன் தாயாரைப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட நான் கடந்த காலத்தில் அந்தப் பருவத்திலிருந்த எனது குழந்தைகளை எண்ணிப் பார்த்து எவ்வளவாக காலம் கடந்து விட்டது என்பது பற்றி சற்று ஏக்கத்துடன் கூடிய மகிழ்ச்சியடைந்தேன்.

பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் ராஜா கூறிய வார்த்தைகளை எண்ணிப்பார்த்தேன். “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” (வச. 1). அதைத் தொடர்ந்து பல எதிர் மறைக் காரியங்களைக் கூறி “ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” என்று கூறியுள்ளார். “பிறக்க ஒருகாலமுண்டு; இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு” என்று எழுதியுள்ளார் (வச. 2). சாலொமோன் ராஜா, இவ்வுலகில் நடக்கும் அனைத்துக் காரியங்களையும் கண்டு இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றது என்று கருதி, அவரது நம்பிக்கையற்ற நிலைமையை ஒருவேளை இவ்வசனங்களில் விளக்கியிருக்கலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்து, குடித்து தங்கள் சகல பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது, தேவனுடைய அனுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்” (வச. 13,14) என்று கூறி ஒவ்வொரு சமயத்திலும் தேவன் இடைபடுவதை அறிக்கை செய்துள்ளார்.

எனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்ததை நான் ஏக்கத்துடன் நினைத்துப் பார்த்ததுபோல நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் கடந்து சென்ற சில நிகழ்ச்சிகளை ஏக்கத்துடன் நினைவு கூருவோம். நமது வாழ்க்கையின் எந்த காலக்கட்டத்திலும் கர்த்தர் நம்முடன் கூட இருப்பதாக வாக்குப்பண்ணியுள்ளார் (ஏசா. 41;10). நமது வாழ்க்கையின் நோக்கம் அவரது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக அவரோடு சேர்ந்து நடப்பதாகும்.