குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டர் பார்பரா என்ற குழந்தைகள் நல மருத்துவர், “உடன் பிறப்புகள் மத்தியில் ஏற்படும் போட்டி மனப்பான்மைக்கு பெற்றோர்கள் காட்டும் ஓரவஞ்சகம்தான் மிக முக்கிய காரணமாக உள்ளது” என்று கூறியுள்ளார். உதாரணமாக பழைய ஏற்பாட்டில் வரும் யோசேப்பு, அவனது தகப்பனாருக்கு மிகவும் பிடித்தமான மகன். அதனால், அவனது மூத்த சகோதரர்கள், அவன் மீது கோபமும், எரிச்சலும் அடைந்தார்கள் (ஆதி. 37:3-4). அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு பயணம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் விற்றுப் போட்டு, ஏதோ ஒருகாட்டு மிருகம் அவனை அடித்து கொன்றுவிட்டது என்ற செய்தியை பரப்பினார்கள் (37:12-36). யோசேப்பின் கனவுகள் சிதறடிக்கப்பட்டு அவனது எதிர்காலம் நம்பிக்கை அற்றதுபோல் காணப்பட்டது.

ஆயினும், யோசேப்பு தன் வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் நெருக்கடியான காலங்களில் கூட தேவனுக்கு உண்மையாய் இருந்து அவரையே சார்ந்திருந்தான். அவனது எஜமானின் மனைவியால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, அவன் செய்யாத செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, அநியாயமாக தண்டிக்கப்பட்ட பொழுதும் அவன் தேவன்மீது நம்பிக்கையுடன் இருந்தான்.

அநேக ஆண்டுகளுக்குப்பின் அவனது சகோதரர்கள், அவர்களது தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினால் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்த பொழுது, அவர்களால் வேண்டாமென்று ஒதுக்கி தள்ளிவிடப்பட்ட அவர்களது இளைய சகோதரனே எகிப்துக்கு பிரதானி என்பதை அறிந்து மிகுந்த கலக்கமுற்றார்கள். “என்னை இவ்விடத்தில் வரும்படி, விற்றுப் போட்டதினால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாய் இருக்கவும் வேண்டாம்; ஜீவ ரட்சணை செய்யும்படிக்கு தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்…, ஆதலால் நீங்களல்ல, தேவனே என்னை இவ்விடத்திற்கு அனுப்பினார்” (45:5,8) என்று அவர்களிடம் யோசேப்பு கூறினான்.

யோசேப்பின் அன்பான வார்த்தைகள், என்னைக் குறித்து சிந்திக்க தோன்றியது. ஒருவேளை யோசேப்பின் இடத்தில் நான் இருந்திருந்தால், நான் பழிக்குப் பழி வாங்க எண்ணியிருப்பேனோ என்று யோசித்தேன். அல்லது தேவன் மேல் நான் எனது நம்பிக்கையை வைத்திருப்பதால் மன்னிப்பதற்கு பெருந்தன்மையுடையவனாய் இருந்திப்பேனோ என்று சிந்தித்தேன்.