பாட ஒரு காரணம்
நாம் பாடும்பொழுது, நம் மூளையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன! நாம் பாடும்பொழுது, மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் நீக்கக்கூடிய ஹார்மோன்கள் நம் உடலில் சுரப்பதாக சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், மக்கள் ஒன்றுகூடி இசைந்து பாடும்பொழுது, அவர்களுடைய இதயத்துடிப்பும் ஒத்திசைப்பதாக வேறுசில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சபையானது, ஒருவரோடொருவர் சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் உரையாடும்படி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார் (எபே. 5:19). மேலும் வேதத்தில், ஐம்பது முறைக்கும் மேலாக ‘பாடித் துதியுங்கள்’ என எழுதப்பட்டுள்ளது.
2 நாளாகமம் 20ஆம் அதிகாரத்தில், தேவன் மீது தாங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, பாடிக்கொண்டு யுத்தத்திற்கு சென்ற ஜனத்தைக் குறித்துக் காணலாம். யூதாவை நோக்கி எதிரிகள் படையெடுத்து வந்தபொழுது, ராஜாவாகிய யோசபாத் மிகவும் பயந்து, தேவனிடம் மன்றாடும்படி ஜனங்களை அழைத்தான். அப்பொழுது ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடி உபவாசித்து, தீவிரமாய் ஜெபித்தார்கள். “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்கு தெரியவில்லை, ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கின்றது,” என்றார்கள் (வச. 12). மறுநாள் அவர்கள் யுத்தத்திற்கு சென்றார்கள். ஆனால், வலிமையான போர்வீரர்களுக்கு பதில் பாடகர் குழுவினர் அவர்களை யுத்த களத்திற்கு நேராக வழிநடத்திச் சென்றார்கள். அவர்கள் யுத்தம் செய்யாமலேயே வெற்றி பெறுவார்கள் என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசித்தார்கள் (வச. 17).
அவர்கள் பாடித் துதித்து யுத்தத்ததை நோக்கி செல்கையில், அவர்களுடைய எதிரிகள் ஒருவரோடொருவர் வெட்டுண்டு மடிந்துபோனார்கள்! தேவஜனம் யுத்தக்களத்தை சென்றடையும் முன் எதிரிகளின் சண்டை முடிந்துப்போயிற்று. சம்பவிக்கப்போவது இன்னதென்பதை அறியாதிருந்தபோதிலும், தேவன்மீது விசுவாசம் வைத்து அவரைப் பாடித் துதித்து சென்ற பொழுது, தேவன் அவர்களை இரட்சித்தார்.
நன்மையான காரணங்களுக்காகவே தேவனை நாம் துதித்துப் போற்றும்படி அவர் நம்மை ஊக்குவிக்கிறார். யுத்தத்தை நோக்கி சென்றாலும் செல்லாவிட்டாலும், நம்முடைய எண்ணங்களையும் இருதயத்தையும் வாழ்வையும் மாற்றும் வல்லமை, நாம் ஏறெடுக்கும் துதிக்கு உண்டு.
மோதிரங்களும் கிருபையும்
என் கரங்களைப் நான் பார்க்கும் பொழுதெல்லாம், என்னுடைய திருமணம் மற்றும் நிச்சயதார்த்த மோதிரங்களை நான் தொலைத்துவிட்டது என் ஞாபகத்திற்கு வரும். ஒரு பிரயாணத்திற்கு செல்ல ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, அவைகளை தொலைத்து விட்டேன். எங்கு தேடியும் அவை கிடைக்கவேயில்லை.
என்னுடைய அஜாக்கிரதையான தவறைக்குறித்து என் கணவரிடம் கூற பயந்தேன். ஏனெனில் இச்செய்தி அவரை எவ்வளவாய் பாதிக்கும் என்கிற கவலை உண்டாயிற்று. ஆனால் அவரோ, அம்மோதிரங்களைக் குறித்து கவலைப்படுவதை விடுத்து, மிகுந்த பரிவோடு என்னை தேற்றினார். இச்சம்பவத்தை வைத்து பின்பு ஒருபோதும் அவர் என்னைக் குற்றப்படுத்தாத போதும், அநேகந்தரம், அவருக்காக நான் ஏதாவது ‘செய்து’, என் கணவருடைய தயவை ‘சம்பாதிக்க’ எண்ணினேன்!
அதைப்போலவே அநேகந்தரம், நாம் நம்முடைய பாவங்களை நினைவுகூர்ந்து, தேவனுடைய மன்னிப்பை பெற ஏதாவது ‘செய்ய’ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், நாம் கிரியைகளினால் அல்ல, கிருபையினாலேயே இரட்சிக்கப்பட்டோம் என தேவன் கூறியுள்ளார் (எபே. 2:8-9). தேவன், புதிய உடன்படிக்கையைக் குறித்து பேசும்பொழுது, “நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்,” என்று இஸ்ரவேலருக்கு வாக்குப் பண்ணினார் (எரே. 31:34). நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்து, அவற்றை இனி ஒருபோதும் நினைவுகூராத தேவன் நமக்கு உண்டு.
நம்முடைய கடந்த காலத்தை நாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, நமக்கு துக்கமாக இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட விசுவாசத்தின் மூலம், கிருபையாய் நாம் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்னும் தேவ வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசத்தின் மூலம் உறுதியான நம்பிக்கை அடைந்து, தேவனுக்கு நன்றிகளை ஏறெடுப்போமாக. தேவன் பாவங்களை மன்னிக்கிறார், மறக்கிறார்.
தேவனுடைய அழைப்பு
ஒரு காலை வேளையில், என் மகள், தன்னுடைய பதினோறு மாதக் குழந்தையை மகிழ்விக்க எண்ணி, அவள் கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள். பின்பு ஒரு நிமிடத்திற்குள்ளாக என்னுடைய தொலைப்பேசி ஒலித்தது. அந்த அழைப்பை எடுத்தபொழுது மறுமுனையில் என் பேரனின் மழலைக் குரலைக் கேட்டேன். அவனிடமிருந்த கைபேசியிலுள்ள என்னுடைய தொலைபேசி எண்ணுக்குரிய "விரைவு எண்ணை" எப்படியோ அவன் அழுத்திவிட்டதால், நான் அவனோடு "உரையாட" நேர்ந்தது. அந்த "உரையாடலை" நான் மறவேன். என்னுடைய பேரனுக்கு ஓரிரு வார்த்தைகள்தான் தெரியும், ஆனால் அவன் என்னுடைய குரலை அறிந்திருந்தபடியால், நான் பேசியபோது பதிலளித்தான். ஆகவே நான் அவனை எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதை அவனிடம் கூறினேன்.
என் பேரனின் குரலை நான் கேட்டபொழுது எனக்குள் உண்டான சந்தோஷம், தேவன் நம்மிடம் ஐக்கியம் கொள்ள மிகுந்த ஆசையாய் இருக்கிறார் என்பதை எனக்கு நினைவூட்டியது. ஆதி முதலாகவே தேவன் நம்மை தீவிரமாக பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து, பயந்துபோய், ஏதேன் தோட்டத்திலே மறைந்து கொண்ட பொழுது, "தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய்," என்றார் (ஆதி. 3:9).
இன்றும் தேவன், இயேசுவின் மூலம் மனுக்குலத்தை கிட்டிச் சேர்த்துக்கொள்ளும்படி நம்மை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார். தேவன் நம்மோடு ஐக்கியம் கொள்ள விரும்புவதால், நமது தண்டனை நீங்கும்படி சிலுவையிலே தம்முடைய ஜீவனையே கொடுத்தார். “தம்முடைய ஒரே பேறான குமாரனையே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது... நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி இயேசுவே” (1 யோவா. 4:9-1௦).
தேவன் நம்மை இவ்வளவாய் நேசிக்கிறார் என்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதோடுகூட நாமும், இயேசுவின் மூலம் அவருடைய அன்பிற்கு மறுமொழி கூறவேண்டும் என தேவன் விரும்புகிறார். நாம் அவரிடம் என்ன பேசுவது என புரியாமல் இருக்கும் நேரம் கூட ஏதாவது நாம் அவரிடம் பேச மாட்டோமோ என ஆசையோடு காத்துக்கொண்டிருக்கிறார்!
பதினைந்து நிமிட சாவல்
சாதாரண மக்கள்கூட, இவ்வுலகத்தின் தலைசிறந்த நூல்களிலிருந்து ஒவ்வொரு நாளும், தொடர்ந்து சிறிது நேரம் படித்து வந்தாலே, தரமான கல்வி ஞானம் பெறலாம் என ஹார்வர்ட்(Harvard) பல்கலைக்கழகத்தின் நீண்டகால தலைவர், முனைவர் சார்லஸ் W. எலியட்(Charles W. Eliot) நம்பினார். 1910ஆம் ஆண்டு, வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், தத்துவம் மற்றும் நுண்கலை நூல்களிலிருந்து சிலபகுதிகளை தேர்வுசெய்து தொகுத்து, ‘தி ஹார்வர்ட் கிளாசிக்ஸ்’(The Harvard Classics) என்ற 50 பாக புத்தக தொகுப்பை வெளியிட்டார். ஒவ்வொரு புத்தகமும், ‘ஒரு நாளில் பதினைந்து நிமிடங்கள்’ என்ற தலைப்பில், எலியட்டின் ‘வாசிப்பு வழிகாட்டி’ ஒன்றை உள்ளடக்கியதாய் இருந்தது. அதில், அவ்வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 8 முதல் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கங்களை வாசிக்கும்படியாக சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
அதைப்போலவே, தினமும் பதினைந்து நிமிடங்கள் நாம் தேவனுடைய வார்த்தையை வாசிப்பதில் செலவுசெய்தால் எப்படியிருக்கும்? நாம் சங்கீதக்காரனோடு சேர்ந்து, “என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்,” எனக் கூறுவோமாக (சங் 119. 36-37).
ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடங்கள் என்றால், ஒரு வருடத்திற்கு தொண்ணூற்றியோறு மணி நேரங்களாகிறது. ஆனால், நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணிநேரம் எவ்வளவு நேர்த்தியாய் வாசிக்கிறோம் என்பதைவிட, தொடர்ந்து விடாமுயற்சியோடு ஒவ்வொரு நாளும் வாசித்து வருகிறோமா, என்பதே முக்கியம். ஒருவேளை நாம் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் கூட வாசிக்க தவறிவிட்டாலும், மறுபடியும் வாசிக்க ஆரம்பித்து தொடரலாம். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நமக்கு போதித்து, நம்முடைய மனதில் உள்ள வார்த்தையை இருதயத்திற்கு கொண்டு சேர்த்து, பின்பு அது நம்முடைய கரங்களையும் கால்களையும் சென்றடைந்து, நம்மை, ஒரு மருரூபத்திற்குளாக அழைத்துச் செல்லும்.
“கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்கு போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக்காத்துக்கொள்வேன்” (வச. 33).
நமக்கு எண்ண வேண்டும்
“மாட்டுவண்டி ஓடின காலகட்டம் முதல் மனிதன் நிலவில் கால் பதித்த காலகட்டத்தையும் நான் கடந்துவந்துள்ளேன். ஆனால் அந்நீண்ட காலக்கட்டம் இவ்வளவு குறுகியதாய் இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை”, என்று தன் பேத்தியிடம் ஒரு முதியவர் கூறினார். அதை அப்பெண் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்.
இவ்வாழ்க்கை குறுகியதுதான். ஆகவே நம்மில் அநேகர் என்றென்றும் வாழ விரும்பி இயேசுவண்டை செல்கிறோம். அதில் தவறேதுமில்லை, ஆனால், நித்திய ஜீவனைக் குறித்த உண்மையான புரிதலை நாம் அறிந்துகொள்ள தவறிவிடுகிறோம். நாம் தவறான காரியங்களைக் குறித்து விரும்பி ஏங்குகிறவர்களாகவே காணப்படுகிறோம். நம்மிடம் இருப்பதை விட மேலானதைக் குறித்து வாஞ்சிக்கிறோம். அது நம் கைகள் எட்டும் துரத்தில்தான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதை அடைந்துவிட ஏங்குகிறோம். உதாரணத்திற்கு, ‘நான் பள்ளிப்படிப்பை முடித்து விட்டால் எவ்வளவு நலமாயிருக்கும்?, ‘எனக்கு அந்த வேலை கிடைத்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்?’, ‘நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றால் எவ்வளவு நலமாயிருக்கும்?, என்று அநேக எதிர்பார்ப்புகள். ஆனால் ஒரு நாள், அம்முதியவரைப் போன்று, ‘காலம் எப்படி இவ்வளவு வேகமாய் கடந்து விட்டது’ என்று அவருடைய வார்த்தைகளை நாமும் எதிரொலிப்போம்.
உண்மை என்னவெனில், இப்பொழுது’ நாம் நித்திய வாழ்வை உடையவர்களாய் இருக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல், “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”, என்று கூறுகிறார் (ரோம. 8:2). மேலும், “மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக் குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (வச. 5) எனவும் கூறியுள்ளார். அதாவது, கிறிஸ்துவண்டை நாம் வரும்பொழுது, நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் மாறிவிடும். விளைவு, நாம் விரும்புவதை பெற்றுக்கொள்கிறோம். “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமும்” (வச. 6).
நாம் நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமானால், ‘வேறொரு’ நபரை திருமணம் செய்து கொண்டு, ‘வேறு’ இடத்தில், ‘வேறு’ நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்பது வாழ்வின் மிகப்பெரிய பொய்களில் ஒன்று. நம்முடைய வாழ்வை, நாம் கிறிஸ்துவுக்குள் காணும்பொழுது, அவ்வாழ்வின் குறுகிய காலக்கட்டத்தையும் அதன் வருத்தங்களையும் குறித்து சிந்திப்பதை விடுத்து, இன்றைக்கும், என்றென்றைக்கும் அவரோடு நாம் முழமையாய் வாழக் கூடிய வாழ்வோடு நாம் பரிமாற்றிக்கொள்வோமாக.