ஒரு காலை வேளையில், என் மகள், தன்னுடைய பதினோறு மாதக் குழந்தையை மகிழ்விக்க எண்ணி, அவள் கைப்பேசியை அவனிடம் கொடுத்தாள். பின்பு ஒரு நிமிடத்திற்குள்ளாக என்னுடைய தொலைப்பேசி ஒலித்தது. அந்த அழைப்பை எடுத்தபொழுது மறுமுனையில் என் பேரனின் மழலைக் குரலைக் கேட்டேன். அவனிடமிருந்த கைபேசியிலுள்ள என்னுடைய தொலைபேசி எண்ணுக்குரிய “விரைவு எண்ணை” எப்படியோ அவன் அழுத்திவிட்டதால், நான் அவனோடு “உரையாட” நேர்ந்தது. அந்த “உரையாடலை” நான் மறவேன். என்னுடைய பேரனுக்கு ஓரிரு வார்த்தைகள்தான் தெரியும், ஆனால் அவன் என்னுடைய குரலை அறிந்திருந்தபடியால், நான் பேசியபோது பதிலளித்தான். ஆகவே நான் அவனை எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதை அவனிடம் கூறினேன்.

என் பேரனின் குரலை நான் கேட்டபொழுது எனக்குள் உண்டான சந்தோஷம், தேவன் நம்மிடம் ஐக்கியம் கொள்ள மிகுந்த ஆசையாய் இருக்கிறார் என்பதை எனக்கு நினைவூட்டியது. ஆதி முதலாகவே தேவன் நம்மை தீவிரமாக பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து, பயந்துபோய், ஏதேன் தோட்டத்திலே மறைந்து கொண்ட பொழுது, “தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு,  நீ எங்கே இருக்கிறாய்,” என்றார் (ஆதி. 3:9).

இன்றும் தேவன், இயேசுவின் மூலம் மனுக்குலத்தை கிட்டிச் சேர்த்துக்கொள்ளும்படி நம்மை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார். தேவன் நம்மோடு ஐக்கியம் கொள்ள விரும்புவதால், நமது தண்டனை நீங்கும்படி சிலுவையிலே தம்முடைய ஜீவனையே கொடுத்தார். “தம்முடைய ஒரே பேறான குமாரனையே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது… நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி இயேசுவே” (1 யோவா. 4:9-1௦).

தேவன் நம்மை இவ்வளவாய் நேசிக்கிறார் என்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதோடுகூட நாமும், இயேசுவின் மூலம் அவருடைய அன்பிற்கு மறுமொழி கூறவேண்டும் என தேவன் விரும்புகிறார். நாம் அவரிடம் என்ன பேசுவது என புரியாமல் இருக்கும் நேரம் கூட ஏதாவது நாம் அவரிடம் பேச மாட்டோமோ என ஆசையோடு காத்துக்கொண்டிருக்கிறார்!