எங்கள் பின் வாசல் பக்கம் உள்ள ரோஜாச் செடியை வெட்டிவிட வேண்டுமென கடந்த இளவேனிற் காலத்திலேயே தீர்மானித்தேன். நாங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இம்மூன்று வருடங்களிலும், அச்செடி பூக்கள் பூக்கவே இல்லை. பூக்களற்ற அசிங்கமான அதன் கிளைகள் எல்லா திசைகளிலும் இப்பொழுது படர்ந்துள்ளது.
என் வாழ்க்கை மிகுந்த பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துவிட்டதால், என் தோட்டத்தைக் குறித்த திட்டங்கள் தாமதமாயிற்று. அதன் பின் சில வாரங்களில், அந்த ரோஜா செடி திடீரென பூத்து குலுங்கியது. அப்படியொரு காட்சியை நான் இதற்கு முன் கண்டதே இல்லை. நறுமணம் வீசும் நூற்றுக்கும் அதிகமான வெள்ளைப்பூக்கள் பின்வாசற் கதவில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் அவை முற்றம் வரையிலும் கூட படர்ந்து அத்தரை பகுதியை அழகான இதழ்களால் மூடின.
எங்கள் ரோஜா செடியின் மறுமலர்ச்சி, இயேசு கூறிய அத்திமர உவமையை எனக்கு நினைவூட்டியது (லூ:13:6-9). அத்திமரம் காய்ப்பதற்கு மூன்றாண்டு கால அவகாசம் கொடுப்பது இஸ்ரவேல் தேசத்திலே வழக்கம். ஆனால், அவை மூன்று ஆண்டுகளில் காய்க்கவில்லை என்றால் அந்நிலத்தை வேறு விதத்தில் பிரயோஜனப்படுத்தும்படி அம்மரத்தை வெட்டிவிடுவார்கள். இயேசு கூறிய உவமையிலே, ஓர் தோட்டக்காரன் ஒரு மரத்திற்காக தன் எஜமானிடம் இன்னும் ஓர் ஆண்டுகால அவகாசம் கேட்பான். இந்த முழு உவமையின் பொருள் என்னவெனில், ‘தாங்கள் வாழ வேண்டிய விதத்திலே இஸ்ரவேலர் வாழவில்லை. ஆகையால் தேவனால் நீதியாய் அவர்களை நியாயந்தீர்க்க முடியும்.’ ஆனால் இரக்கமுள்ள தேவன், அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புபெற்று பூத்து குலுங்கும்படி அவர்களுக்கு இரக்கம் பாராட்டி, கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார்.
நாம் அனைவரும் தழைத்தோங்க வேண்டுமென தேவன் விரும்புவதால், நம் அனைவருக்கும் கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளார். நாம் விசுவாசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் சரி, இரட்சிக்கப்படாத உற்றார் உறவினர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாலும் சரி, அவர் மிகுந்த இரக்கம் உள்ளவர் என்பது நம் அனைவருக்கும் நற்செய்தி அல்லவோ!
தேவன் அளிக்கும் மன்னிப்பை இவ்வுலகம் ஏற்றுக்கொள்வதற்கு இவ்வுலகத்திற்கு அவர் கூடுதல் அவகாசம் அளித்துள்ளார்.