எங்கள் ஆலய ஆராதனைக்குழுவில் மௌத் ஆர்கன் (Mouth Organ) வாசிக்கும் என் கணவர், சில சமயம் இசை வாசிக்கும்பொழுது, கண்களை மூடிக்கொண்டு வாசிப்பதை நான் கவனித்துள்ளேன். அப்படி கண்களை மூடிக்கொள்ளும் பொழுது, கவனத்தை சிதறவிடாமல், தன்னுடைய மௌத் ஆர்கனில் மாத்திரம் கவனத்தை செலுத்தி, சிறப்பான இசை அமைப்பதின் மூலம் தேவனை முழு மனதோடு துதிக்க முடிவதாக என் கணவர் கூறுவார்.
நாம் ஜெபிக்கும் பொழுது, நம்முடைய கண்கள் கட்டாயம் மூடியிருக்க வேண்டுமோ என சிலர் எண்ணக்கூடும். நாம் எவ்விடத்திலும் எவ்வேளையிலும் ஜெபிக்கலாம். அப்படியிருக்கையில், எப்பொழுதும் நாம் கண்களை மூடிக்கொண்டு ஜெபிப்பது, சாத்தியமற்றது. ஏனென்றால், நாம் கட்டாயம் கண்களை மூடிக்கொண்டுதான் ஜெபிக்க வேண்டுமெனில் நாம் நடக்கும் பொழுது அல்லது செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பொழுது அல்லது வண்டி ஓட்டும் பொழுது நம்மால் ஜெபிக்க முடியாதே!
அதைப்போலவே, நாம் ஜெபிக்கும்பொழுது, சரீரப்பிரகாரமாக இந்நிலையில்தான் நாம் உட்காரவோ, நிற்கவோ, முழங்காற்படியிட வேண்டும் என எவ்வித விதியுமில்லை. சாலொமோன் ராஜா தேவாலயத்தைக்கட்டி பிரதிஷ்டை செய்தபொழுது, முழங்காற்படியிட்டு “தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து,” ஜெபம் செய்தான் (2 நாளா. 6:13-14). வேதத்திலே ஜெபத்தைக் குறித்து குறிப்பிடும்பொழுது, முழங்காற்படியிட்டும் (எபே. 3:15), நின்றும் (லூக். 18:10-13), முகங்குப்புற விழுந்தும் (மத். 26:39), எந்நிலையிலும் நாம் ஜெபிக்கலாம் என்பதைக் காணலாம்.
நாம் தேவனை முழுமனதோடு நோக்க, நம் சரீர நிலைகளாகிய நிற்பது, முழங்காற்படியிடுவது, கைகளை வானத்திற்கு நேராக உயர்த்துவது, கண்களை மூடுவது போன்றவை முக்கிய மானதல்ல. நம்முடைய இருதயத்தின் நிலையே முக்கியமானது. ஏனென்றால், “அதினிடத்திலிருந்து (இருதயம்) ஜீவஊற்று புறப்படும்” (நீதி. 4:23). நம்முடைய ஜெபங்களுக்கு, “(அவருடைய) கண்கள் திறந்தவைகளும், (அவருடைய) செவிகள் கவனிக்கிறவைகளுமாய் இருப்பதினால்,” (2 நாளா. 6:4௦) நாம் ஜெபிக்கும் பொழுதெல்லாம் நம் இருதயம் நம்முடைய அன்பான தேவனை நோக்கி பக்தியோடும், நன்றியோடும், தாழ்மையோடும் தலை வணங்குவதாக.
தாழ்மையான இருதயத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபமே தலைசிறந்த ஜெபமாகும்.