எங்கள் ஊரைப் பார்த்தவாறு உள்ள கற்பாறை மேஜை (table rock) என்னும் பீடபூமியில் மின்னொளி வீசும் பெரிய சிலுவை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கற்பாறை மேஜையை சுற்றியுள்ள நிலங்களில் அநேக வீடுகள் உள்ளன. அனால் சமீபத்தில் பாதுகாப்பு கருதி,  அவ்வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள். மிக உறுதியான கற்பாறை படுகை கொண்ட டேபிள் ராக்கிற்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய வீடுகள் பாதுகாப்பாக இல்லை. ஏனென்றால் அவை தங்கள் அஸ்திபாரங்களை விட்டு ஒவ்வொரு நாளும் மூன்று அங்குலங்கள் முன்னும்பின்னும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இவை நகர்ந்து கொண்டே இருப்பதினால் முக்கியமான தண்ணீர் குழாய்கள் உடைந்து போய், அவ்வீடுகள் சரிவதின் வேகம் அதிகரித்துவிடும்.

தன் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செய்கிறவன் தன் வீட்டை கற்பாறையின் மீது கட்டுகிறவனைப் போலிருக்கிறான் என்று இயேசு கூறுகிறார் (லூக். 6:47-48). இவ்வீடுகள் கடும்புயலிலும் உறுதியாய் நிற்கும். ஆனால், அதற்கு எதிர்மாறாக, தன் அறிவுரைகளை கேட்டு அதன்படி செய்ய கவனமாயில்லாதவர்கள், சரியான அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் கட்டப்பட்ட வீட்டைப் போலிருப்பார்கள். கடும் மழையும் வெள்ளமும் உண்டாகும்போது அவ்வீடுகள் விழுந்துவிடும் என்று கூறுகிறார்.

தேவன் என்னிடம் எதிர்பார்த்ததை நான் பரிபூரணமாய் செய்யாவிட்டாலும், அவருடைய எதிர் பார்ப்புகளை நான் நெருங்கிவிட்டதாகவே எண்ணி பல சமயங்கள் என்னுடைய மனச்சாட்சியின் தூண்டுதல்களை அலட்சியப்படுத்தியுள்ளேன். ஆனால், உறுதியான டேபிள் ராக்கின் மலையடி வாரத்தின் ‘அருகே’ ஆட்டங்கண்டு கொண்டிருக்கும் அவ்வீடுகள் நம்முடைய ‘கீழ்ப்படிதல்’ தேவனுடைய எதிர்பார்ப்புகளின் ‘அருகில்’ இருந்தாலும் போதாது என்பதை எனக்கு விவரித்து காட்டியது. நம்முடைய வாழ்வில் நம்மை தாக்கும் புயல்களை எதிர்கொண்டு உறுதியாய் நிற்க, கற்பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டைப்போல நாம் நம் தேவனுடைய வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும்.