நவீன சமூகத்தின் பிரச்சனைகளுக்கு அறியாமையும் அக்கறையின்மையும்தான் காரணமா என்று ஒருவரிடம் கேட்டபொழுது, “எனக்குத் தெரியாது, எனக்கு அதைப் பற்றி அக்கறையும் கிடையாது” என்று அவர் விளையாட்டாகக் கூறினார்.
உலகத்தையும் அதன் போக்கையும் பார்க்கும்பொழுது அநேகர் இப்படித்தான் சோர்ந்து போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நம்முடைய வாழ்வில் ஏற்படும் மனக் கலக்கத்தையும் குழப்பத்தையும் பற்றி இயேசு நன்கு அறிந்திருக்கிறார். அறிந்ததினால்தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து ஏசாயா 53ஆம் அதிகாரத்தை படிக்கும்பொழுது இயேசு நமக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதை மேலோட்டமாக அறிந்துகொள்ளலாம். “அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டுமிருந்தார்.. தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும்” (வச. 7). “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்” (வச. 8). “கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்ற நிவாரணப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக்கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (வச. 10).
நமது பாவங்களையும் குற்றங்களையும் சிலுவையில் இயேசு மனமுவந்து சுமந்துதீர்த்தார். நம்முடைய தேவன் அனுபவித்த பாடுகளைப்போல் வேறொருவரும் நமக்காக பாடுபட்ட தில்லை. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்க செலுத்தப்படவேண்டிய விலைக்கிரயத்தை அவர் நன்கறிந்ததினால், விலையேறப்பெற்ற அன்பினால், அவரே அதை செலுத்தினார் (வச. 4-6).
மரணத்தை வென்று இயேசு உயிர்த்தெழுந்ததினால், அவர் இன்றும் நம் மத்தியில் உயிருடன் இருக்கின்றார். ஆகவே நாம் இப்பொழுது என்ன சூழ்நிலையில் இருந்தாலும், இயேசு அதை நன்கு அறிந்திருக்கிறார். நம்மீது அக்கறை கொண்டபடியால், அவரது அன்பினால் சுமந்து செல்வார்.
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்! லூக்கா 24:6