புற்றுநோயால் போராடிக் கொண்டிருந்த என் தாய்க்கு உடனிருந்து பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி தேவனுக்கு நான் நன்றி செலுத்தினேன். மருந்து மாத்திரைகள், உதவி செய்வதற்குப் பதிலாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதால் என் தாயார் அச்சிகிச்சையை கைவிட முடிவு செய்தார். “பரலோக வீட்டிற்கு செல்ல நான் தயாராகி விட்டேன் என்பதை தேவன் அறிவார். ஆகவே என்னுடைய கடைசி நாட்களை குடும்பத்தினரோடு சந்தோஷமாக கழிக்கவே விரும்புகிறேன்;` வேதனையோடு இருக்க விரும்ப வில்லை” என்று அவர் கூறினார்.
பரம வைத்தியராகிய நம்முடைய பரமபிதாவிடம் நம்பிக்கையோடு ஓர் அற்புதத்தை எதிர் பார்த்து மன்றாடினேன். ஆனால் என்னுடைய தாயாரின் ஜெபத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தால், என்னுடைய ஜெபத்திற்கு மறுப்பு தெரிவிக்க நேரிடுமே. ஆகவே, கண்ணீரோடு, “தேவனே, உம்முடைய சித்தம் நிறைவேறுக,” என்று என்னை ஒப்புக்கொடுத்தேன்.
இதற்குப் பின்பு, வேதனையற்ற நித்தியத்திற்குள் என் தாயாரை இயேசு சீக்கிரத்தில் அழைத்துக் கொண்டார்.
இயேசு வருமளவும், விழுந்து போன இவ்வுலகில் நாம் பல உபத்திரவங்களை அனுபவிக்க நேரிடும் (ரோ. 8:22-25). நம்முடைய பாவசுபாவம், தெளிவற்ற கண்ணோட்டம், மற்றும் வலி வேதனைகளை குறித்த பயம் ஆகியவை நம்முடைய ஜெபிக்கும் திறனை நிலைகுலையச் செய்திடும். ஆனால், நல்லவேளை, “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்” (வச. 27). வேறோருவருடைய ஜெபத்திற்கு சம்மதம் தெரிவிப்பதால் நமக்கு மனவேதனை அளிக்கக்கூடிய மறுப்பு தெரிவிக்க நேரிடும். ஆயினும் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று நமக்கு நினைவூட்டுகிறார் (வச. 28).
தேவனுடைய மகத்தான திட்டத்தில் நம்முடைய சிறிய பங்களிப்பை நாம் அளிக்க சித்தம் கொண்டால், “தேவன் நல்லவர். நான் அறிந்துகொள்ள வேண்டியது இதுவே. அப்படியிருக்க, அவர் என்ன செய்ய சித்தம்கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே,” என்னும் என் தாயாருடைய பொன்மொழியை நாம் எதிரொலிக்கலாம். அவருடைய மகிமைக்கென்று நம்முடைய எல்லா ஜெபங்களையும் தம்முடைய சித்தத்திற்குள்ளாக நமக்கு பதிலளிக்கிறார் என்கிற நிச்சயமுள்ளவர்களாய் தேவ கிருபையின் மேல் விசுவாசம் கொள்வோமாக.
நம்முடைய ஜெபங்களைக் காட்டிலும் தேவனுடைய பதில்கள் ஞானம் நிறைந்தவை.