காலேப் ‘முழு இருதயத்தோடு’ ஆண்டவரைச் சேவித்த உத்தமமான மனிதன். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை உளவுபார்த்து மோசேவுக்கும் மக்களுக்கும் அறிக்கை அளிக்கும்படி அனுப்பப்பட்ட 12 பேர் கொண்ட குழுவில் காலேபும், யோசுவாவும் இருந்தனர். “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்வோம்” (எண். 13:30) என காலேப் கூறினான். ஆனால் அந்தக் குழுவில் இருந்து 10 பேர் வெற்றிபெற இயலாது என கூறினார்கள். தேவன் அதை அவர்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார் என்பதை அறிந்திருந்தும், தடைகளை மாத்திரமே அவர்கள் பார்த்தார்கள் (வச. 31-33).

இந்த 10 பேர் ஜனங்களை நம்பிக்கை இழக்கச்செய்து, தேவனுக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தார்கள். இதனால் அவர்கள் 40 ஆண்டுகள் வனாந்திரத்திலேயே அலைந்து திரிந்தார்கள். ஆனால் காலேப் தன்னுடைய நம்பிக்கையை இழந்து போகவேயில்லை. “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் (முழுமனதுடன்) என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (14:24) என கர்த்தர் கூறினார். 45 ஆண்டுகள் கழித்து, காலேப் 85 வயதாய் இருக்கும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் (முழு இருதயத்தோடு) பின்பற்றினபடியினால்” (யோசு. 14:14) எபிரோன் பட்டணத்தை தனக்கென பெற்றுக்கொண்டான்.

பல நூற்றாண்டுகள் கழித்து, “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என இயேசுவை நோக்கி நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் கேட்ட பொழுது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை” (மத். 22:35-38) என இயேசு பதிலளித்தார்.

இன்றும்கூட, நம் முழு இருதயத்தோடு நாம் செலுத்தும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்பிற்கும் பாத்திரரான தேவன் மீது தான் கொண்ட விசுவாசத்தின் மூலம் காலேப் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்.