சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.