பாடகரும், பாடலாசிரியருமான மெரிடித் ஆண்டுரூஸ் (Meredith Andrews) ஒரு பேட்டியின் பொழுது, தன்னுடைய ஊழியம், கலைப் படைப்புகள், திருமண வாழ்க்கை மற்றும் தாய்மையை சரியான விதத்தில் நடத்திச் செல்ல திணறியதாக கூறினார். “என்னை முற்றிலுமாக நொறுக்கக்கூடிய ஒர் செயல் முறையின் மூலம் தேவன் என்னை ஒரு சுத்திகரிப்பின் காலத்திற்குள்ளாய் நடத்திச் செல்வதைப் போல உணர்ந்தேன்,” என்று அக்கடினமான காலக் கட்டத்தைக் குறித்து நினைவு கூர்ந்தார்.

யோபு தன்னுடைய வாழ்வாதாரத்தை, சுகத்தை மற்றும் குடும்பத்தை இழந்த பொழுது செய்வதறியாது திணறினான். தினந்தோறும் தேவனை நோக்கி ஏறெடுத்த விண்ணப்பங்களையெல்லாம் அவர் அசட்டை செய்வதாக எண்ணினான். தன்னுடைய வாழ்வின் எல்லை எங்கிலும் தேவன் இல்லாதவாறு அவனுக்கு தோன்றியது. கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் எங்கு நோக்கினாலும், தேவனைக் காணவில்லை எனக் கூறினான் (யோபு 23:2-9).

ஆனால், இந்த விரக்தியின் மத்தியிலும் ஒரு நொடிப்பொழுது தெளிவாக சிந்தித்தான். ஒரு இருட்டறையில் சிறு ஒளிக்கீற்றுடன் ஒளி வீசும் மெழுகுவர்த்திப் போல அவனுடைய விசுவாசம் துளிர்க்க ஆரம்பித்து. “நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தப்பின் நான் பொன்னாக விளங்குவேன்,” எனக்கூறினான் (வச. 10). தேவன் கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கை, பெருமை மற்றும் உலகப்பிரகாரமான ஞானம் ஆகியவற்றை, அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலைமைகளை கொண்டு சோதித்து, அவைகளின்று அவர்களை சுத்திகரிக்கிறார். இந்த சுத்திகரிப்பின் காலகட்டத்தில் அவரின் உதவியை எதிர்பார்த்து நாம் ஏறெடுக்கும் கூக்குரலுக்கு அவர் மவுனமாய் இருப்பது போல தோன்றும். ஆனால், நாம் விசுவாசத்தில் இன்னும் அதிகமாய் பெலப்பட அது நமக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமாக இருக்கலாம்.

கஷ்டங்கள் மற்றும் வலி வேதனைகளுக்கு மத்தியில் நம்முடைய வாழ்க்கையின் கடினமான சூழ்நிலையில் தேவனை விசுவாசிக்கும் பொழுது, நிலையான தேவ சாயல் நம்மில் பிரகாசிக்கும்.