இன்று, பரந்த புல்வெளியில் தனிமையாக பூத்திருந்த ஒரு சிறிய ஊதா நிற பூவைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் கவிஞர் தாமஸ் கிரேயின் “பாலைவனக் காற்றிலே தன் நறுமணத்தை வீணடித்துக்கொண்டிருந்த…” என்னும் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. கண்டிப்பாக இந்த பூவை எனக்கு முன் யாராவது பார்த்திருக்கக் கூடும் என எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை, இதை இனி ஒருவரும் பார்க்கக் கூடாமலும் போகலாம். பிறகு எதற்கு இந்த அழகிய படைப்பு இவ்விடத்தில் என எண்ணினேன்.

இயற்கை ஒருபொழுதும் வீணாகக் கடந்து போவதில்லை. அது தன்னைப் படைத்தவருடைய உண்மையையும், நன்மையையும், அழகையும் விவரிக்கின்றது. இயற்கையானது, ஒவ்வொரு நாளும், தேவனுடைய மகிமையை புதிது புதிதாய் அறிவிக்கிறது. நான் அவரை இயற்கையின் அழகில் காண்கிறேனா அல்லது அதின் மேல் ஒரு சிறு பார்வை வீசிவிட்டு அலட்சியமாய் சென்று விடுகிறேனா?

இயற்கை தன்னைப் படைத்தவருடைய அழகை முழுவதும் அறிவிக்கிறது. ஒரு சூரியகாந்திப் பூவின் அழகைக் காணும் பொழுதும், காலை கதிரவனின் பிரகாசத்தை காணும் பொழுதும், ஒரு மரத்தின் வடிவத்தைக் காணும் பொழுதும் அவற்றைப் படைத்தவரை நாம் ஆராதிக்கலாம், பக்தியுடன் தொழுது கொள்ளலாம் அல்லது நன்றி தெரிவிக்கலாம்.

ஒரு சுட்டெரிக்கும் கோடை நாளில் காட்டுப் பகுதியில் நண்பனோடு நடைபயணம் சென்றதை சி. எஸ். லூயிஸ் இவ்வாறு விவரிக்கிறார். அவர் தன் நண்பனிடம், தேவனை நோக்கிய நன்றியுள்ள இருதயமாக தன் இருதயம் விளங்க, அதை எவ்வாறு பண்படுத்துவது எனக் கேட்டதற்கு, அவருடைய நண்பர் அருகில் இருந்த ஒடையை நோக்கி திரும்பி, அதிலிருந்து கொட்டிய சிறிய அருவியிலிருந்து நீரை தன் முகத்திலும், கைகளிலும் தெளித்துக் கொண்டு, “இதிலிருந்து ஏன் துவங்கக்கூடாது?” என கூறினார். அப்பொழுதுதான்,
“நீ இருக்கும் இடத்தில் இருந்தே துவங்கு,’ என்கிற மகத்தான கோட்பாட்டை கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.

மெதுவாய் கசியும் ஒரு சிறிய அருவி, வேப்ப மரத்தின் குளிர்ந்த காற்று, ஒரு சிட்டுக் குருவிக் குஞ்சு, ஒரு சிறிய மலர், இவற்றிற்காக நன்றி செலுத்தத் துவங்கலாமே.