நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் குறித்து நாங்கள் குறைகூறுவது வழக்கம். ஒரு வாரத்தில் சுமார் மூன்று முறை ஏற்படும் இம்மின்தடை, 24 மணி நேரம் கூட நீடிக்கும். அப்பொழுது எங்கள் சுற்று வட்டாரம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். இம்மின் தடையினால் அடிப்படை வீட்டுப்பொருட்களைக் கூட உபயோகப்படுத்த முடியாத நிலையை ஏற்றுக்கொளவது மிகவும் கடினமான ஒன்று.
இந்நிலையைக் குறித்து, கிறிஸ்தவரான எங்கள் அண்டைவீட்டார் “இக்காரியத்தைக் குறித்து கூட தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமா?” என்று, 1 தெசலோனிக்கேயா 5:18 “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்ற வசனத்தின் அடிப்படையில் அடிக்கடி கேட்பார். நாங்களும் ஒவ்வொரு முறையும், “ஆம், கண்டிப்பாக நாங்கள் எல்லாவற்றிலேயும் தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரஞ் செய்கிறோம்,” என்று கூறுவோம். ஆனால் அரைமனதுடன் நாங்கள் கூறும் இப்பதில், ஒவ்வொரு முறையும் மின்தடை ஏற்படும் பொழுது நாங்கள் முறுமுறுப்பதற்கு எதிர்மறையாக உள்ளது.
ஆனால் ஒருநாள், எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும் என்கிற எங்கள் நம்பிக்கைக்கு ஒரு புதிய அர்த்தம் உண்டாயிற்று. அன்று நான் வேலை முடித்து வீடு திரும்பிய பொழுது, என் அண்டை வீட்டார், “இன்றைக்கு மின் தடை ஏற்பட்டதற்கு இயேசுவிற்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் எங்கள் வீடு தீப்பற்றி நாங்களும் அதோடு கூட சேர்ந்து எரிந்து சாம்பலாகியிருப்போம்,” என நடுநடுங்கியபடி கூறினார். என்ன நடந்ததெனில் அன்றைய தினம் ஒரு குப்பை லாரி அவர்கள் வீட்டு முன்பு இருந்த மின்கம்பத்தில் மோதியதால் உயர் மின் அழுத்த கம்பிகள் அங்குள்ள அநேக வீடுகளின் மேல் விழுந்தது. ஒருவேளை அன்று மின்சார தடை ஏற்படாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்.
நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் “தேவனே, உமக்கு நன்றி,” எனக் கூறுவது கடினமாக இருக்கலாம். ஆனால் அவருடைய சித்தத்தை அறியாதிருந்தும், நம்முடைய எல்லா நிலைகளிலும் அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு நன்றி சொல்லும் சந்தர்ப்பங்களாக அவற்றை மாற்ற வல்ல தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தக்கடவோம்.
தேவனுடைய கிருபையினாலே எல்லாவற்றிலும் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க முடியும்.