இணையதளத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் உற்சாகப்படுத்தி எழுதும் எழுத்தாளர்கள் உண்டு. இணையதளத்தில் ஓர் நாள் என் தோழி, “நான் உன்னைக் காண்கிறேன்,” என்று கூறினாள். கவலையோடு மனஅழுத்தத்திலிருந்த எனக்கு அவளுடைய வார்த்தைகள் சமாதானத்தையும், நல்லுணர்வையும் ஏற்படுத்தியது. ‘அவள் என்னைக் கண்டாள்’. அதாவது என்னுடைய எதிர்பார்ப்புகள், பயங்கள், போராட்டங்கள் மற்றும் கனவுகளையும் கண்டாள். கண்டு, அவள் என்னை நேசித்தாள்.

நான் என்னுடைய தோழியின் சாதாரணமான, ஆனால் மிக வல்லமையான ஊக்கத்தை கேட்டபொழுது, ஆபிரகாம் வீட்டில் அடிமையாய் இருந்த ஆகாரை நினைவு கூர்ந்தேன். பல வருடங்களாக ஒரு வாரிசுக்காக காத்திருந்த சாராளும், ஆபிரகாமும் பின்பு அவர்களுடைய கலாச்சார வழக்கத்தின்படி ஆகாரின் மூலம் ஒரு குழந்தை பெறும்படி தன் கணவரிடம் கூறினாள். ஆகார் கருவுற்ற பிறகு சாராளை அற்பமாக எண்ணினாள். ஆகவே சாராள், ஆகாரை கடினமாக நடத்தினாள். இதனால் ஆகார் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்.

வேதனையோடும், குழப்பத்தோடும் இருந்த ஆகாரை தேவன் கண்டு, அவள் அநேக சந்ததியருக்கு தாயாக இருப்பாள் என வாக்குப்பண்ணி ஆசீர்வதித்தார். அந்த சந்திப்பிற்குப் பிறகு ஆகார் தேவனை “எல் ரோயீ” என அழைத்தாள். அதற்கு “என்னைக் காண்கிற தேவன்” (ஆதி. 16:13) என அர்த்தம். ஏனெனில் அவள் தனிமையாகவோ, கைவிடப்பட்டவளாகவோ இல்லை என்பதை அறிந்தாள்.

ஆகாரைக் கண்டது போல, நேசித்தது போல தேவன் நம்மையும் காண்கிறார், நேசிக்கிறார். ஒருவேளை நாம் நம்முடைய நண்பர்களால் அல்லது குடும்பத்தினர்களால் உதாசீனப் படுத்தப்படுவது போல அல்லது நிராகரிக்கப்படுவது போல உணரலாம். அப்படியிருக்க நாம் இந்த உலகத்திற்கு காட்டும் நம்முடைய முகத்தை மட்டுமல்ல, நம்முடைய எல்லா ரகசிய உணர்வுகளையும், பயங்களையும் நம்முடைய பிதா காண்கிறார். கண்டு ஜீவனளிக்கும் வார்த்தைகளைப் பேசுகிறார்.