நான்கு வயதுள்ள ராஜூவின் மகிழ்ச்சியான முகம், அவன் அணிந்திருந்த தலைக் கவசம் கொண்ட டீ-ஷர்ட்டின் உள்ளிருந்து எட்டிப் பார்த்தது. அத்தலைக் கவசம் ஒரு முதலை தன் கூர்மையான பற்களுடைய வாயைப் பிளந்து, அவன் தலையை விழுங்குவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது! அவனை அவ்வுடையில் பார்த்ததும், அவன் தாயின் உள்ளம் சோர்ந்து போயிற்று. ஏனெனில் நீண்ட நாட்களுக்குப்பின் தாங்கள் சந்திக்கப் போகும் ஒரு குடும்பத்தின் முன் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த விரும்பினாள்.

தன் மகனிடம், “ராஜூ இந்த உடை இவ்விசேஷத்திற்கு ஏற்றதல்ல,” எனக் கூறினாள்.

ஆனால் ராஜூவோ, “அப்படி ஒன்றும் இல்லை. இது பொருத்தமான உடைதான்” என்றான்.

“அப்படியா, இந்த உடைக்குப் பொருத்தமான அந்த விசேஷம் என்ன?” என அவள் கேட்டதற்கு, “உங்களுக்கு தெரியுமே, அவ்விசேஷம் நம் வாழ்க்கைதான்” என்றான். இப்படி ஒரு பதிலுக்கு கட்டாயம் அவன் அந்த டீ-ஷர்ட் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

“மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமே அல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை” (பிர. 3:12) என்கிற வசனத்தின் சத்தியத்தை அம்மகிழ்ச்சிகரமான சிறுவன் ஏற்கனவே அறிந்திருக்கிறான். பிரசங்கியின் புத்தகம்
மனுஷக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகமே அன்றி, தேவனுடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புத்தகம் அன்று. இதை அறியாமல் அப்புத்தகத்தை தவறாய் புரிந்துகொண்ட அநேகர் சோர்ந்து போவதும் உண்டு. அப்புத்தகத்தை எழுதிய சாலொமோன் ராஜா, “வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?”
(வச. 9) என்கிறார். ஆனாலும் அப்புத்தகம் முழுவதிலும் நம்பிக்கையின் ஒளி வீசக் காணலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்” (வச. 13) என்றும் சாலொமோன் எழுதியுள்ளார்.

நாம் மகிழ்ந்து களிகூரும்படி நமக்கு நன்மையானவற்றை அருளுகிற தேவனையே நாம் சேவிக்கிறோம். அவர் செய்வதெல்லாம் “என்றைக்கும் நிலைக்கும்” (வச. 14). நாம் அவரை ஏற்றுக்கொண்டு அவருடைய அன்பான கட்டளைகளை கைக்கொண்டால், ஒரு நோக்கமுள்ள அர்த்தமுள்ள மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ கிருபையளிப்பார்.