1974ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சீன விவசாயிகள் கிணறு வெட்டிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சரியமானதொன்றை கண்டுபிடித்தார்கள். அவர்களுடைய வறண்ட நிலத்திற்கடியில், கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த ஆளுயர டெரக்கோட்டா (Terracotta) சிலைகள் புதைந்திருந்தன. மத்திய சீனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆபூர்வமான கண்டுபிடிப்பில் 8000 வீரர்களும், 150 குதிரைப் படையும், 520 குதிரைகளைக் கொண்ட 130 ரதங்களும் இருந்தன. இன்று சீனாவின் மிக முக்கியமான சுற்றுலா ஸ்தலமாக இந்த டெரக்கோட்டா படை மாறிவிட்டது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதைக் காண வருகின்றனர். அநேக நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த இவ்வியப்பளிக்கும் பொக்கிஷம், இன்று உலகத்தோடு பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
அப்போஸ்தலனாகிய பவுல், இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரு பொக்கிஷம், கிறிஸ்துவை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது என எழுதி உள்ளார். “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2 கொரி. 4:7). கிறிஸ்துவையும், அவருடைய அன்பையும் குறித்த செய்தியே நமக்குள் இருக்கும் பொக்கிஷம்.
இது மறைத்து வைக்க வேண்டிய பொக்கிஷம் அல்ல. தேவனுடைய அன்பினாலும், கிருபையினாலும் உலகத்திலுள்ள எல்லா தேசத்தின் மக்களும் அவருடைய குடும்பத்திற்குள் வந்து சேர இதை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆவியானவரின் துணையோடு இன்று இப்பொக்கிஷத்தை நாம் எவரிடமாவது பகிர்ந்து கொள்வோமாக.
உன்னுடைய சாட்சியை மற்றவர்கள் பார்க்கவும், கேட்கவும் இடங்கொடு.